OUR CLIENTS
குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்!
குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்! Posted on 17-Oct-2018 குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு குறட்டை விடும் அதிகாரிகள்!

வேலூர், அக்.17-

விழிப்புணர்வு குறைவாக உள்ளதால் குழந்தைகளுக்கு கட்டாய திருமணங்களை செய்து வைக்கும் நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகார் வந்தாலும் தடுக்க வேண்டிய அதிகாரிகள் ஆழ்ந்த குறட்டை விடும் அவல நிலையில் பணியாற்றுகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதுகுறித்து புகார் வந்தாலும் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக பணியாற்றுகின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு எதிராக சம்மந்தப்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்களே முன்னின்று நடத்தும் மிகப்பெரிய வன்முறை குழந்தை திருமணம். திருமணம் செய்யும் சட்டப்பூர்வமான 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடத்தப்படும் திருமணம் குழந்தை திருமணம். குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் திருமணங்களை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தடை செய்திருக்கிறது. குழந்தை திருமணங்களை செய்து வைப்பவர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆனாலும் குழந்தை திருமணங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படாத சமூக நோயாக நாடெங்கும் பரவி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வு தமிழகத்தில் பெண் குழந்தைகள் திருமணம் இன்னும் பரவலாக நடக்கிறது என்பதை உறுதி செய்திருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, அணைக்கட்டு, வாலாஜா பகுதிகளில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. சீருடைக்குள் தாலியை மறைத்து கொண்டு பள்ளிக்கு வரும் பெண் குழந்தை, மணமேடையில் கதறியழுத பெண் குழந்தை, அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி விட்டு கண்ணீரோடு காத்திருக்கும் பெண் குழந்தை, தந்தையின் வயதொத்த மணமகனை கண்டு அஞ்சி நடுங்கிய பெண் குழந்தை, திருமணத்தின் போது தற்கொலைக்கு முயன்ற பெண் குழந்தை என்று வேலூர் மாவட்டத்தில் கண்ணீர் கதைகளை கூறிக் கொண்டே போகலாம். பலர் குழந்தைகளை திருமணம் செய்து கொண்டு 2 ஆண்டுகளில் அவர்களை
கைகழுவி விட்டு விட்டு வேறு பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் அதிகம் வேலூர் மாவட்டத்தில் உலா வருகின்றனர். இவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவது இல்லை. அந்த இளம் பெண்கள் 18 வயதுக்குள்ளாக வயிற்று பிழைப்புக்காக விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் எய்ட்ஸ் என்ற கொடிய உயிர்க்கொல்லி நோயால் தாக்கப்பட்டு தனது வாழ்க்கையை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி கதையை சொல்லிக் கொண்டே செல்லலாம்.

குழந்தை திருமணம் என்றதும் அதை தடுத்தும் நிறுத்தும் நோக்கில் பல நல்ல உள்ளம் படைத்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்:1098ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தாலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க
உத்தரவிடுன்றனர். ஆனால் சமூக நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் கடமை தவறாத அதிகாரிகள் இருமாப்புடனும், தெனாவெட்டுடனும் நடந்து கொள்கின்றனர். இதனால் குழந்தை திருமணங்கள் அமோகமாக நடந்து வருகின்றன. குழந்தை திருமணம் சட்ட விரோதம் ஆகும். குழந்தை திருமண தடை சட்டம் 2006ன்படி 18 வயது குறைந்த பெண்ணுக்கும், 21 வயது குறைந்த ஆணுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 18 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண் திருமணத்தை ஆதரிக்கும் உறவினர்கள் மட்டுமன்றி திருமணத்தில் பங்கேற்போரும் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். அதேபோல மணமக்களின் வயது சான்றுகளை சரிபார்த்த பிறகே திருமண மண்டபத்தை வாடகைக்கு விட வேண்டும். இப்படி பல சட்டங்கள் போடப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்தை மீறி இவ்வளவு காரியங்கள் நடந்தேறுகின்றன. 

குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதுமானதாக இல்லை. குழந்தை திருமணம் செய்வதால் கர்பப்பை முழுவளர்ச்சி அடையாமல்
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும். எடை குறைவான குழந்தை பிறக்கவும், தாய் சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ரத்தசோகை, உடல் மற்றும் மனம் பாதிப்பு அடைவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவது உறுதி. படிக்கும் வயதில் திருமணம் செய்வதால் கல்வி தடைபட்டு தன்னம்பிக்கை குறையும். பாலியல் ரீதியான பிரச்னை, கணவன், மனைவி குடும்ப பிரச்னை ஏற்படும். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் தோன்றும். இளம் விதவைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். தாம்பத்திய உறவு மனச்சிதைவு நோயை ஏற்படுத்தும் வாய்ப்பும் உண்டு. இவ்வளவு பிரச்னைகள் உண்டாகும் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிகாரிகள் என்று திருமணம் நடந்தாலும் பரவாயில்லை கிடைத்த தகவலை கொண்டு அந்த இளம்ஜோடியை பிரித்து அந்த பெண்ணை காப்பாற்ற முன்வருகிறார்களோ அன்றுதான் இந்த பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது, திருமணத்துக்கு முன்னர் சொல்லியிருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று மழுப்பலாக பதில் கூறுவது கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்ந்து நடந்து கொண்டால் எல்லாம் நலமே. 

தமிழக அரசு பல தீராத பிரச்னைகளுக்கு கூட தீர்வு காணும்போது, இதற்கு விழிப்புணர்வு  காண்பது என்பது மிகவும் எளிது. அரசு மனது வைத்தால் போதும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Label