OUR CLIENTS
விவசாயியிடம் ரூ 60 ஆயிரம் லஞ்சம் விருத்தாசலம் தாசில்தார், டிரைவர் கைது!
விவசாயியிடம் ரூ 60 ஆயிரம் லஞ்சம் விருத்தாசலம் தாசில்தார், டிரைவர் கைது! Posted on 17-Oct-2018 விவசாயியிடம் ரூ 60 ஆயிரம் லஞ்சம் விருத்தாசலம் தாசில்தார், டிரைவர் கைது!

விருத்தாசலம், அக்.17-

 விருத்தாசலம் அருகே சொந்த நிலத்தில் மண் அள்ளிய விவசாயியிடம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மிரட்டிய தாசில்தார், டிரைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் மேல்பாதி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(39). விவசாயி. இவர் தன் நிலத்தில் வருவாய்த்துறை அனுமதியின்றி மண் அள்ளி மாற்று இடத்தில் குவித்து வைத்திருந்தார்.தகவலறிந்து சென்ற தாசில்தார் ஸ்ரீதரன், அவரது டிரைவர் கந்தசாமி ஆகியோர் மண் அள்ளியது குறித்து போலீசில் புகார் தெரிவிக்காமல் இருக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். 60 ஆயிரம் ரூபாய் பேரம் பேசப்பட்டு 20 ஆயிரம் ரூபாய் முதல் தவணையாக செல்வம் கொடுத்துள்ளார்.மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை தராவிட்டால் போலீசில் புகார் தெரிவித்து கைது செய்து விடுவதாக தாசில்தார் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. செல்வம் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.விருத்தாசலத்தில் உள்ள தாசில்தார் குடியிருப்புக்கு சென்ற செல்வம் ரசாயனம் தடவிய 40 ஆயிரம் ரூபாயை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தாசில்தார் ஸ்ரீதரன்(43), உடந்தையாக இருந்த டிரைவர் கந்தசாமி(40) ஆகியோரை கைது செய்தனர். டிரைவர் கந்தசாமி முன்னாள் ராணுவ வீரர். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன் விருத்தாசலம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்காத வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட போது தாசில்தார் ஸ்ரீதரனுக்கும், வி.ஏ.ஓ., கலையரசன் என்பவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது .தாசில்தார் புகாரில் வி.ஏ.ஓ., மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.ஏ.ஓ.,க்கள் சங்கமும், தாசில்தாருக்கு ஆதரவாக வருவாய்த்துறை அலுவலர் சங்கமும் போராட்டங்கள் நடத்தின. இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தாசில்தார் ஸ்ரீதரன் கைது செய்யப்பட்டதால் வி.ஏ.ஓ.,க்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Label