OUR CLIENTS
தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Posted on 17-Oct-2018 தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை
தமிழ்நாடு அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்துவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அரசுப் பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்காக, சென்னை, நேரு உள் விளையாட்டரங்கத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விளையாட்டு சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தேசிய பள்ளிக்குழும விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காசோலை வழங்கிய முதல்வர் பழனிசாமி, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த விழாவுக்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார், இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி மேலும் பேசியதாவது. இளைஞர்களுக்கு படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாகும்.  படிப்பு -  அறிவை வளர்ப்பது போல,    விளையாட்டு உடலை பேணிக் காத்து,  மன உறுதியையும், அறிவாற்றலையும் வளர்க்கும் என்பதை உணர்ந்து  கல்வி, விளையாட்டு என்ற இரண்டிலும் மாணவர்கள்  கவனம் செலுத்த வேண்டியது  அவசியம் ஆகும். 

வருகின்ற 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை நமது எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம் என நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் அறிவித்து இருந்தேன். இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெறுவது நமது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இளைஞர்களாகிய நீங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதிர்கால இந்தியாவை வழிநடத்துபவர்களான நீங்கள் முன்உதாரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதைப் பார்த்து மற்றவர்களும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள். இதன் மூலம் பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் உருவாக வழிவகை ஏற்படும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் தங்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினியை பயன்படுத்தி தங்களது தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். கணினியின் மூலம் உபயோகமான விவரங்களை கண்டறிந்து அதனை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் சிலரின் தீய எண்ணங்களுக்கு இடம் கொடுத்துதவறான பாதையில் செல்லாமல், நான் கூறிய பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், நாட்டின் நலனில் அக்கறையுள்ள ஒரு நல்லகுடிமகனாக உங்களை உயர்த்திக் கொள்வதற்கு வழிவகை ஏற்படும். விளையாட்டு வீரர்களே! வீராங்கனைகளே மற்றும் இளைஞர் பெருமக்களே !நீங்கள் வெற்றி பெற விளையாடுங்கள் –தோல்வியை தவிர்க்க அல்ல தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள் நீண்ட கால திட்டங்களைப் பற்றி எப்போதும சிந்தியுங்கள். உங்கள் பலத்தை மதிப்பீடு செய்து அதன்படியே திட்டமிடுங்கள்.

ஒரு பரந்த, தொலைநோக்கு கண்ணோட்டத்துடனேயே முடிவெடுங்கள். உங்களது நேர்மையை ஒரு போதும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள் என்று கூறி,இங்கே பேசியவர்கள் பல கோரிக்கைகளை வைத்தார்கள். அதைபரிசீலித்து ஒரு கோரிக்கையை நான் இந்த நேரத்திலே அறிவிக்க விரும்புகின்றேன். ஏற்கனவே, தற்போது வேலைவாய்ப்பிலே உள்ள 2 சதவீதமான உள்ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்தத் தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்னே பேசிய பல்வேறு சங்கத்தினுடைய நிர்வாகிகள், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் விளையாடினால் என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்கின்றார்கள் என்று சொன்னார்கள். 

ஏற்கனவே அரசிடத்தில் இந்தசங்கத்தினுடைய நிர்வாகிகள் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி என்னிடத்திலே தெரிவித்தார். விளையாட்டை தமிழகத்திலே ஊக்குவிக்கின்ற விதமாக இன்றைக்கு அரசின் சார்பாக 2 சதவீத உள்ஒதுக்கீட்டை நீங்கள் அறிவிக்க வேண்டுமென்று கேட்டார், அதை அறிவித்தோம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சியிலே,பல்வேறு சங்கத்தினுடைய நிர்வாகிகளும், விளையாட்டுத் துறை அமைச்சரும் வேண்டுகோள் வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அந்த 2 சதவீதத்தை 3 சதவீதமாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் இளைஞர் பருவத்திலே விளையாடுவது அவசியம். விளையாட்டில் கலந்து கொண்டு விளையாடுகின்ற பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சி எந்த விதத்திலும் குறைவானது அல்ல. மற்ற பதவிகளில் வகிக்கின்ற மகிழ்ச்சியை விட விளையாடுகின்ற பொழுது கிடைக்கின்ற மகிழ்ச்சிதான் சிறந்த மகிழ்ச்சியென்று இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். ஒவ்வொருவரும் விளையாட்டுப் போட்டிகளிலே கலந்துகொண்டு விளையாடுகின்ற பொழுது மனம் ஒருமைப்படும், அப்பொழுது அந்தவிளையாட்டுதான் நமக்கு கண்ணுக்குத் தெரியும், எதுவுமே ஞாபகத்திற்கு வராது. 

இந்தியாவிலேயே, சர்வதேச அளவிலே நம்முடைய விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் பல்வேறு போட்டியிலே கலந்து கொண்டு தங்கம் வென்றார்கள். 8வது இடத்திலிருந்து இப்பொழுது 3வது இடத்திற்கு நாம் முன்னேறி இருக்கின்றோம் என்று சொன்னார்கள்.  இந்த அரசு இந்த விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு வகையிலே உதவி செய்து, 3வது இடத்திலிருந்து முதல் இடத்திலே வருவதற்கு உங்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்,

இவ்விழாவில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், பா. பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, விளையாட்டு வீரர்களின் சாகசங்களை கண்டுகளித்த முதல்வர் பழனிசாமி தானும் அவர்களுடன் கூடை பந்து விளையாடினார்.

Label