OUR CLIENTS
பல ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்த்த குரு சிஷ்யன்
பல ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்த்த குரு சிஷ்யன் Posted on 21-Oct-2018 பல ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்த்த குரு சிஷ்யன்

பெங்களூரு, அக்.21-

கர்நாடகாவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். உடன் முதல்வர் எச்.டி.குமாரசாமி, ஐஜத தலைவர் தேவகவுடா. படம்: வி.சீனிவாசமூர்த்தி

கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதனால் காங்கிரஸ் - மஜத தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் மண்டியா, ஷிமோகா, பெல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜம்கண்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக தனித்தும் காங்கிரஸும் மஜதவும் கூட்டணி அமைத்தும் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கர்நாடக அரசியலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் குரு - சிஷ்யர்களாக இருந்தனர். மஜதவில் ஏற்பட்ட மனக்கசப்பால் சித்தராமையா, தேவகவுடாவை கடுமையாக விமர்சித்து வந்தார். காங்கிரஸ் - மஜத கூட்டணி உருவாகியுள்ள நிலையில் இருவரிடையிலான மோதல் இடைத்தேர்தல் முடிவை பாதிக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் தேவகவுடாவும், சித்தராமையாவும் ஒரே மேடையில் தோன்றினர். முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஷ்வர், காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறும்போது, “12 ஆண்டுகளுக்கு பிறகு நானும் சித்தராமையாவும் ஒரே மேடையில் தோன்றி, உங்களை (பத்திரிகையாளர்களை) சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது கூட்டணி, காங்கிரஸ் - மஜத கூட்டணியின் வெற்றியை குறிக்கிறது. கர்நாடகாவில் இந்தக் கூட்டணி முதல்வர் குமாரசாமி தலைமையில் 5 ஆண்டுகள் நீடிக்கும். மக்களவைத் தேர்தலிலும் இரு கட்சிகளும் ஒன்றாக தேர்தலை சந்திக்கும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நாங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறோம்” என்றார்.

சித்தராமையா பேசும்போது, “நாட்டின் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் தேவகவுடா, நாட்டின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. அதிகரித்துவரும் வகுப்புவாத பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவுக்கட்ட வேண்டும். காங்கிரஸ் - மஜத கூட்டணியை இருகட்சி தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். தேவைப்பட்டால் தேர்தலின்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து பிரச்சாரம் செய்வோம்” என்றார்.

இந்த சந்திப்பு குறித்து முதல்வர் குமாரசாமி கூறும்போது,“தேவகவுடாவும், சித்தராமையாவும் மீண்டும் கைகோர்க்க வேண்டும் என இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் விரும்பினோம். இதுகுறித்து சொன்னதுமே இருவரும் ஒப்புக்கொண்டார்கள். இந்த சந்திப்பால் அடிமட்ட அளவில் காங்கிரஸ் - மஜத தொண்டர்களும் உற்சாகமாகி இருக்கின்றனர். இதன்மூலம் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்”என்றார்.

Label