OUR CLIENTS
திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு Posted on 21-Oct-2018 திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சேலம், அக்.22-
 
தொடர்ந்து பொய் அறிக்கை வெளியிடும் தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று காலை வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட உத்தம சோழபுரத்தில் 70 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 
இவ்விழாவில் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு இந்த கட்சி இருக்காது என்று தப்புக்கணக்கு போட்டார்கள் அப்போதைய தி.மு.க. தலைவர். அதையும் அப்போதைய தலைவர்கள் தவிடுபொடியாக்கினார்கள்.

தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து 28 எம்.எல்.ஏ.க்களை பெற்று பிரிந்த கழகத்தினை ஒன்றாக இணைத்து எம்.ஜி.ஆர்.கண்ட கனவை நினைவாக்கியவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்.

இந்த கழகத்தை தோற்றுவித்தபோது தி.மு.க.வால் எவ்வளவோ, பிரச்சினைகளை சந்தித்தார். எவ்வளோ சோதனைகளையோ சந்தித்தார். அத்தனையும் தாக்குப்பிடித்துதான் தமிழகத்திலேயே சிறப்பான ஆட்சியை தந்தார்.

அம்மா அவர்கள் புரட்சி தலைவர் வழியிலேயே நின்று கழகத்தை கட்டிக் காத்தபோது திராவிட முன்னேன்ற கழகம் என்ற தி.மு.க. எதிரிகளால் எவ்வளவோ பிரச்சினைகள் சோதனைகளை சந்தித்தார். அத்தனையும் மக்கள் துணை கொண்டு, கழகத்தினுடைய நிர்வாகிகள் துணை கொண்டு எதிரிகளை வென்று தலை நிமர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி தந்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்.

இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சி தலைவரும் அவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அம்மா அவர்களை துன்பப்படுத்தினார். அந்த துன்பத்தை எல்லாம் தாங்கிக்கொண்டு நமக்கு வாழ்வு தந்தது அம்மா அவர்கள்.

தி.மு.க.வைபோல் குடும்ப அரசியல் கிடையாது. யார்? சிறப்பாக செயல்படுகின்றார், யார்? விசுவாசமான இருக்கின்றார். யார் மக்களிடத்திலேயே செல்வாக்கு பெறுகின்றார். மக்களுக்கு சேவை செய்பவர்கள் யார்? என்பதை கண்டறிந்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பதவி வழங்கினார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட எம்.எல்.ஏ., எம்.பி. ஆக முடியும்.

தி.மு.க.வில் இப்படி பார்க்க முடியாது. அ.தி.மு.க. ஜனநாயக இயக்கம். ஜனநாயக கட்சி. ஒரு சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். அ.தி.மு.க.தொண்டர்கள் நிறைந்த கட்சி. தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி. இந்தியாவிலேயே அதிக தொண்டர் கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

இதுவரைக்கும் 1 கோடியே 20 லட்சம் பேர் சேர்ந்து விட்டனர். இன்னும் 30 லட்சம் பேர் சேர உள்ளனர்.

மேலும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மூலம் 50 ஆயிரம் தொண்டர்கள் என மொத்தம் 2 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.

அனைவரின் ஒத்துழைப்போடு இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி வீறுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதையெல்லாம் பொறுக்க முடியாத தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். இப்போது தி.மு.க. தலைவராகவும் இருக்கிறார். உங்களுடைய அப்பா கருணாநிதி இருக்கும்போதே அ.தி.மு.க.வை ஒன்னும் பண்ண முடியவில்லை.

நீங்கள் என்ன பண்ண போறீங்க சொல்லுங்க பார்ப்போம். அவர் இருக்கின்றபோது எவ்வளவு பிரச்சினை உண்டாக்கினாங்க, துன்பத்தை உண்டாக்கினாங்க என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அத்தனையும் தாக்குப் பிடித்து தான் இன்றைக்கு தமிழகத்திலேயே 28 ஆண்டுகாலம் ஆட்சியில் உள்ள ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

நீங்கள் எங்களை மிரட்டி பார்க்கிறீங்க. ஒன்னும் நடக்காது. சொந்த உழைப்பு வலுமையாக இருக்கும். ஆள் வைத்து செய்கிற பணி அரை பணியாகத் தான் இருக்கும். தி.மு.க. கட்சி ஆள் வைத்து செய்கிற கட்சி. அ.தி.மு.க. சொந்தமாக உழைக்கின்ற கட்சி. இந்த கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது என்பதை இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை, இந்த ஆட்சியில் மக்கள் எந்த பயனும் அனுபவிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். இந்த ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை அம்மா கொடுத்து இருக்கிறார்.

இன்றைக்கு இந்திய பெருங்கண்டத்திலேயே அதிக திட்டங்களை கொண்டு வந்த ஒரே முதல்-அமைச்சர் அம்மா தான். தேர்தலில் வாக்குறுதி அளித்தார்கள். நான் முதல்-அமைச்சராக வந்தால் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்குவேன் என்று சொன்னார்கள்.

கிட்டத்தட்ட 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்சி கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க.தான். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டத்தை நடைமுறைபடுத்தியதும் கிடையாது, வெற்றி கண்டதும் கிடையாது.

ஆகவே 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்து அம்மா அவர்கள் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்கள்.

அதைப்போல் நம்முடைய மாணவர்களுக்கு அறிவு பூர்வமான விஞ்ஞான கல்வியை கொடுப்பேன். அதற்காக மடிக்கணினி கொடுப்பேன் என்று அறிவித்தார். இதுவரைக்கு கிட்டத்தட்ட 36 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி கொடுத்து இருக்கிறோம். இன்னும் 15 லட்சம் பேருக்கு கொடுக்க இருக்கிறோம். மாணவ, மாணவிகளுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றிய தலைவி புரட்சி தலைவி அம்மா.

ஒரு மடிக்கணினியுடைய விலை 14 ஆயிரம் ரூபாய். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்தது கிடையாது. உலகத்தில் பல வல்லரசு நாடுகளில் கூட விலையில்லா மடிக்கணினி வழங்கிய சரித்திரம் கிடையாது.

விஞ்ஞான உலகத்தில் அறிவு பூர்வமான கல்வியை நம்முடைய குழந்தைகளுக்கு கொடுத்தால் தான் உலக அளவில் நம்முடைய மாணவ செல்வங்கள் போட்டி போட்டு வேலைக்கு செல்ல முடியும், உயர்கல்வி பயில முடியும்.

தி.மு.க. தினந்தோறும் பொய் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எப்போதும் பார்த்தாலும் பொய் அறிக்கைத்தான். எந்த கூட்டத்தில் பார்த்தாலும் பொய்யான செய்தியைத் தான் மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டு இருக்கின்றார். எந்த காலத்திலும் அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கின்ற விதத்தில் தான் மடிக்கணினி கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு நாட்டு நடப்பை பற்றி உலகத்தில் உள்ள அனைவரும் இந்த மடிக்கணினியில் இண்டர் நெட் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Label