OUR CLIENTS
வேலூர் பேருந்து நிலையத்தில் வன்முறை வெறியாட்டம்!-பொதுமக்கள், பயணிகள் பீதியால் அலறியடித்து ஓட்டம்!
வேலூர் பேருந்து நிலையத்தில் வன்முறை வெறியாட்டம்!-பொதுமக்கள், பயணிகள் பீதியால் அலறியடித்து ஓட்டம்! Posted on 24-Oct-2018 வேலூர் பேருந்து நிலையத்தில் வன்முறை வெறியாட்டம்!-பொதுமக்கள், பயணிகள் பீதியால் அலறியடித்து ஓட்டம்!

வேலூர், அக்.24-

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வன்முறை வெறியாட்டம் நடந்தது. இதனால் பொதுமக்கள், பயணிகள் பீதியால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் நிற்குமிடத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்திருந்தனர். அந்த பொது இடத்தில் மாணவர்கள் சிலர் போதை தலைக்கேறிய நிலையில் பயணிகள் அமர்ந்திருந்த இடத்தில் நேற்று நள்ளிரவு சிறுநீர் கழித்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட பொதுமக்களை அந்த தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதை பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோக்காரர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அந்த ஆட்டோக்காரர்களை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மாணவர்களை பிடிக்க முயன்றவர்களை தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த பொதுமக்கள் திருப்பித் தாக்கத் தொடங்கினர்.

 பொதுமக்களின் கொடூர தாக்குதலை தாங்கமுடியாமல் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நாலாபுறமும் தெறித்து ஓடினர். பதிவு எண் எழுதப்படாமல் இருந்த ஒரு புல்லட் மற்றும் நான்கு பைக்குகள், கார் என அந்த மாணவர்கள் தப்பிச் சென்றனர். பொதுமக்கள் பீதியில் உறைந்திருந்தனர். அவ்வேளையில் மீண்டும் புதிய பேருந்து நிலையத்துக்கு திரும்பிய அந்த மாணவர்கள் கையில் கட்டை, கத்தி, பெல்ட் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் சுதாரித்து கொண்ட பொதுமக்கள் அந்த மாணவர்களை சுற்றி வளைத்து அடித்து துவைத்தனர். அதாவது மாணவர்களது முகம், மூக்கு, வாய் போன்றவற்றில் ரத்தம் வரும் வரை சரமாரியாக தாக்கினர். அதுவரை கண்ணில் படாத காவல் துறையினர் வந்து அந்த வடநாட்டு மாணவர்களை இழுத்துச்சென்றனர்.

 வாங்கிய உதைக்கு பயந்து ஓடிய மாணவர் கூட்டம் தொடர்ந்து பேருந்து நிலையத்தை சுற்றி சுற்றி வந்து பொதுமக்களை மிரள வைத்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பைக்கில் வந்த இரண்டு போலீசார் நாங்கள் சத்துவாச்சாரி லிமிட் என சொல்லி விட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். 24 மணிநேரமும் போக்குவரத்து இயங்கும் முக்கிய பேருந்து நிலையத்தில் போதிய அளவு போலீசார் இல்லாதது பெரிய குறை என்றுதான் சொல்ல வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கூட போலீசார் பணியாற்றுவதே இல்லை. அது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அரங்கேறிய பிறகு அரை மணி நேரம் கழித்து 2 போலீசார் மட்டுமே சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட யாரும் பேருந்து நிலையம் பக்கமே தலை வைத்து கூட படுக்கவே இல்லை. இப்படி வன்முறை வெறியாட்டம் நடந்து கொண்டிருப்பதை தடுக்க போலீசார் விரைந்து வரவே இல்லை. 

ஆனால் சொத்து தொடர்பான ஒரு  சிவில் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் தனிநபர் ஒருவருக்கு பாதுகாப்பு என்கின்ற பெயரில், இதே வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகராஜன் 25 போலீசாரை டெம்போ டிராவலர் வேனில் கொண்டு  சென்று சேன்பாக்கத்தில் குவித்தார். இதுகுறித்து கேட்டதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு என்று வெளியில் சொல்லிக் கொண்டார் அந்த கடமை வீரர்.

 எதற்கு செல்ல வேண்டுமோ அதற்கு செல்ல மறுப்பதுதான் காவல் துறையின் தலையாய பணியாக உள்ளது. இங்கு பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதை அறிந்தும் எந்த காவல் துறை அதிகாரியும் அந்த இடத்துக்கு வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபருக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல் துறை, பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க பின்வாங்குகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தலை காய்ந்தவனுக்கு ஒரு சட்டம், வசதி படைத்தவனுக்கு ஒரு சட்டம் என்று சட்டத்தை வளைக்கச் செய்கிறார் இந்த வடக்கு காவல் ஆய்வாளர் நாகராஜன் என்று சொன்னால் அது மிகையாகாது. இதை ஏன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், காவல் துறை துணைத்தலைவரும் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்பதே புரியாத புதிராக உள்ளது. 

எதுவாக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு பொதுமக்கள் கலவரத்தில் உள்ளே புகுந்து தனியார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். எதுவாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டதால்தான் வன்முறையாக மாறியது. புதிய பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமரா செயல்படுகிறதா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். அப்படி ஒருவேளை சிசிடிவி கேமரா செயல்பட்டால் அந்த பதிவுகளை வைத்து ஆராய்ந்து பார்த்தால் உண்மைநிலை காவல் துறையினருக்கு தெரியவரும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் செயல்படாத காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இப்படி வன்முறை வெறியாட்டம் நடைபெறும் போது அதை முன்னின்று தடுக்க வேண்டிய காவல் துறையினர் எங்கு சென்றனர் என்பதே விடைதெரியாத கேள்வியாக உள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க முடியாமல் காவல் துறையினர் நேற்று இரவு முழுக்க திணறியதுதான் தனிக்கதை. இந்த பிரச்சனையை காவல் துறை எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்த பிரச்சனையில் என்னதான் வழக்கு தொடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label