OUR CLIENTS
மதுரையில் அடுத்தடுத்து 5 கொலைகள்- ஆணையர் விளக்கம்
மதுரையில் அடுத்தடுத்து 5 கொலைகள்- ஆணையர் விளக்கம் Posted on 24-Oct-2018 மதுரையில் அடுத்தடுத்து 5 கொலைகள்-  ஆணையர் விளக்கம்

மதுரை, அக்.24-

மதுரை மாநகரைப் பொருத்தவரை பெரும்பாலான கொலைகள், முன்விரோதம் காரணமாகவே நடைபெற்றுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

தூங்கா நகரமான மதுரையில், கடந்த 10 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 5 கொலைகள் அரங்கேறியுள்ளன. இவற்றில் 3 கொலைகள் ரவுடிகளோடு தொடர்புடையவை என்பதால், மதுரை மக்கள் மத்தியில் அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. எனினும்,  பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  கூறியுள்ளார்.

மதுரையின் பிரபல ரவுடியான கருப்பு, பட்டப்பகலில் மாநகரின் பிரதான பகுதியில் 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். கருப்பு கொலை மதுரையில் கடந்த 10 நாட்களில் நடந்த 5-வது கொலையாகும். மதுரை மேலப் பொன்னகரம் அருகில் ஞாயிறு பிற்பகல் ரவுடி கருப்புவை 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ரவுடி கருப்பு அக்கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். அவரை ஓட ஓட விரட்டிய அந்தக் கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தபிறகு,  கருப்புவை வெட்டிய கும்பல் தப்பியோடியது. தகவல் அறிந்த மதுரை செல்லூர் போலீசார், சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடி கருப்பைக் கொலை செய்தவர்கள் யார், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து செல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரையில் கடந்த 10 நாட்களில் கருப்பு கொலையோடு சேர்த்து 5 கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன. இவற்றில் 3 கொலைகள் ரவுடிகளோடு தொடர்புடையவை. ரவுடிக் குழுக்களிடையே உள்ள மோதல் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். எனினும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் தெரிவித்துள்ளார். 

Label