OUR CLIENTS
வேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு!
வேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு! Posted on 29-Oct-2018 வேலூர் மாநகராட்சி அலுவலர் மீது சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு!

வேலூர், அக்.29-

வேலூரில் உள்ள ஒரு சில்க்ஸ் நிறுவனம் மண் தர பரிசோதனை செய்யாமல் அடுக்குமாடிகள் கட்டி வியாபாரம் செய்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு மாநகராட்சியிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டதா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்ட கேள்விக்கு மழுப்பலாக பதில் தரப்பட்டதால் ஒரு சமூக ஆர்வலர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

அரசுத்துறைகளில் ஊழலற்ற நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களை தர கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வது இச்சட்டத்தின் நோக்கமாகும்.

பொதுமக்கள் தகவல் கோரி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். அவசர தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும். தவறினால் தகவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காதது, தவறான தகவல்கள் தருதல், வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தந்தால் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுப்பதோடு, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கலாம். இச்சட்டம் அமலுக்கு வந்த பின், நாடு முழுவதும் ஏராளமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பல பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைத்துள்ளது. 

ஆனால், வேலூர் மாவட்டத்தில் இச்சட்டம், விதிவிலக்காக உள்ளது. 30 நாட்களுக்குள் வழங்க வேண்டிய பதில்கள்  தாமதமாக வழங்கப்படுகிறது. அந்த பதிலும் சரியாக வழங்காமல் கடமைக்கு, நாங்களும் பதில் அனுப்பினோம் என்ற நோக்கில் சில பதில்களை அளிக்கின்றனர். விண்ணப்பத்தாரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காததால், அவர்கள் மேல்முறையீட்டு அலுவலரிடம் மனு அனுப்பி தங்களுக்கு தேவையான விவரங்களை பெறும் சூழ்நிலை நீடித்து வருகிறது. அலட்சியப்போக்கான இந்த நடவடிக்கை, சமூக ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்&காட்பாடி ரோட்டில் உள்ள ஒரு சில்க்ஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள எஸ்கிலேட்டர் இயங்கும் போது அந்த அடுக்குமாடி கட்டடம் லேசான அதிர்வு ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் கூறினார்கள். அதேபோல் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அடிப்படையான தீயணைப்பு வசதி கூட அப்போது அக்கட்டடத்தில் இல்லை. இந்த அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பாக மண் தரப்பரிசோதனை  செய்யப்படவில்லை. அத்துடன் ஹாலோ பிளாக் கற்களை அடுக்கி இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் வரும் இடம் என்பதால் அந்த கட்டடத்தால் பேராபத்து நிகழ அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த சில்க்ஸ் நிறுவனம் அலட்சியம் காண்பித்து வருகின்றது.
இந்நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்லும் இடத்தில் பாதுகாப்பு தன்மை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி கேட்டு விண்ணப்பித்தார். சமூக ஆர்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வேலூர் மாநகராட்சியினர் மெத்தனப்போக்குடன் பொறுப்பற்ற பதிலையே அளித்தனர். 
கட்டடம் சார்ந்த கேள்விகள் கேட்கும்போது, அநேகமான பதில்களுக்கு “நகல் ஏதும் இவ்வலுவலக கோப்பில் இல்லை” “அனுமதி வழங்கிய விபரம் கோப்பில் இல்லை” என்ற பதிலை மாற்றி மாற்றி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்,  மாநகராட்சி நிர்வாகமோ  சரிவர தெளிவாக பதில் அளிக்காமல் மழுப்பலாக பதில்   கொடுத்துள்ளது. இதனால் பொறுப்பற்ற பதிலைகண்ட சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.  மாநகர மக்களின்  உயிருடன் விளையாடும் அந்த சில்க்ஸ் நிறுவனத்தின் மீதும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல்  மழுப்பலாக பதில் அளித்த மாநகராட்சி அலுவலர்கள் மீதும் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.  பண்டிகை காலங்களில் துணி எடுக்க  அதிகளவில் மக்கள் வருகை தந்தால்  விபரீதம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் அந்த கட்டடத்தின் உறுதி தன்மையும் பாதுகாப்பு தன்மையும் வேலூர் மாநகராட்சி அதிகாரியும், அக்கட்டடத்தின் உரிமையாளரும் தெரிவிக்க கடமைப்பட்டவர்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
வேலூர் மாநகராட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ள குழல் ஊதும் மன்னன் பெயரை கொண்ட அதிகாரி ஒருவரே, இதுபோன்ற செயல்களுக்கு காரணம் என்று வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் முணுமுணுக்கின்றனர்.
 
அதுமட்டுமின்றி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் துணை நின்று சுடுகாட்டை பிளாட்போடும் அளவுக்கு, இடங்களை அடையாளம் காட்டி தாரை வார்த்துள்ளார் என்று பரவலாக பேசப்படுகிறது. இதுபோன்று  குழல் ஊதும் மன்னன் பெயரை கொண்ட அதிகாரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியிலும், வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் மத்தியிலும் உலா வருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சுடுகாட்டையும்  அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்து மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளன. 

இதனை விரைவில் ஆதாரத்துடன்  அடையாளப்படுத்தி பொதுமக்களுக்கும், அரசுக்கும் இடத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம் என்று சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். விரைவில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சூளுரைத்துள்ளனர்.

Label