OUR CLIENTS
தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம்தான் அனுமதி தமிழக அரசின் மனு நிராகரிப்பு..!
தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம்தான் அனுமதி தமிழக அரசின் மனு நிராகரிப்பு..! Posted on 30-Oct-2018 தமிழகத்தில்  தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம்தான் அனுமதி தமிழக அரசின் மனு நிராகரிப்பு..!

புதுடெல்லி, அக்.30-

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய விதிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுக்க வரும் நவம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.   இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து இருந்தனர். இதில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது. தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. 

இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று  உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா மனுவை தாக்கல் செய்தார்.   அந்த மனுவில், கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும் என்றும், தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க  (அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை) அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா கோரிக்கை விடுத்தார்.

இதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த  இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பா.வினோத் கன்னா வாதிட்டார்.   அப்போது, தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.    காலையில் ஒன்றரை மணிநேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு இதில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி. இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் வேண்டுமென்றால் அந்த நேரத்தை மாநில அரசு தீர்மானிக்கலாம். தமிழகத்திற்கு ஏற்ற 2 மணி நேரத்தை அரசே தீர்மானிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழக மக்கள் இந்த தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

Label