OUR CLIENTS
பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து பணியாற்றுவோம்: சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பின் ராகுல் பேட்டி
பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து பணியாற்றுவோம்: சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பின் ராகுல் பேட்டி Posted on 01-Nov-2018 பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து பணியாற்றுவோம்: சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பின் ராகுல் பேட்டி

புதுடில்லி

டில்லிக்கு வந்துள்ள ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல்,”பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று சூளுரைத்தார்.

வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஆந்திர பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதில் இருந்து பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் செயலில் இறங்கியுள்ளார். தற்போது, சந்திரபாபு நாயுடு தேசிய கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார்.

இந்நிலையில், டில்லிக்கு வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதில் வரவிருக்கும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த சந்திப்பை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவும், ராகுல் காந்தியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தனர். அரசு அமைப்புகள் பாதுகாக்கப்படவேண்டும்.

இதில் பேசிய சந்திரபாபு நாயுடு,”நாட்டிலுள்ள அரசு அமைப்புகள் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு தான் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆகையால், அரசு அமைப்புகள் காக்கப்பட நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இறந்த காலத்தை பற்றி பேசவேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம். நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை குறித்து நாங்கள் பேச இருக்கிறோம். நாட்டில் நடப்பது குறித்து பேசுவோம்” என்று தெரிவித்தார்.

மேலும்,”நாட்டையும், ஜனநாயகத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். ராகுல் காந்தி அவர்களுடன் நான் கலந்துரையாடினேன். அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே தளத்திற்கு கொண்டுவரவேண்டும் என்பதற்கு அவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்” என்று கூறினார். 

பிரதமர் வேட்பாளர் யார்?

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு,

”வேட்பாளர்கள் யார் என்று அறிந்துகொள்வதில் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள். நாங்கள் நாட்டின் நலன் மீது ஆர்வமாக இருக்கிறோம்” என்று பதிலளித்தார்.

பாஜகவை வீழ்த்துவோம்

பின்னர் பேசிய ராகுல் காந்தி,

”வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஜனநாயகத்தையும் அரசு அமைப்புகளையும் பாதுகாப்போம். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல், வேலையின்மை ஆகிய முக்கிய பிரச்சனைகளில் பணியாற்றுவோம்” என்று கூறினார்.

ரபேல் ஒப்பந்த ஊழல் உண்மைதான்

ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்தது தெளிவாக தெரிகிறது. அந்த விவகாரத்தில் விசாரணை நடத்த முன்வரும் அமைப்புகள் தாக்கப்படுகின்றன. என்ன நடந்தது என்பதை அறிய சரியான விசாரணை நடத்தப்படவேண்டும். எங்கு பணம் சென்றுள்ளது. யார் இந்த ஊழலில் ஈடுபட்டனர். இவை அனைத்தும் வெளியே தெரியவேண்டும். அதனால்தான் இந்த விஷயத்தை நான் வெளியே கொண்டுவர முயல்கிறேன். நமது நாடு இதை தெரிந்துகொள்ளவேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Label