OUR CLIENTS
ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கு வாகன பழுதுபார்ப்பு நிலைய உரிமையாளர் கைது!
ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கு வாகன பழுதுபார்ப்பு நிலைய உரிமையாளர் கைது! Posted on 13-Nov-2018 ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கு வாகன பழுதுபார்ப்பு நிலைய உரிமையாளர் கைது!

வேலூர், நவ.13-

வேலூர் அருகே வேனுடன் 
ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வாகன பழுதுபார்ப்பு நிலைய உரிமையாளரை வனத்துறையினர்  கைது செய்தனர். மேலும், இந்தக் கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிக்கவும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர்-ஆரணி சாலை சாத்துமதுரை பகுதியிலுள்ள வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் கடந்த 29-ஆம் தேதி செம்மரக்கட்டைகளுடன் வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக வேலூர் கிராமிய போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து போலீஸார், வனத்துறை அலுவலர்கள் இணைந்து அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த வேனின் கன்டெய்னரில் 90 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
முதல் தரமுள்ள 3.75 டன் எடையுடைய இந்த செம்மரக்கட்டைகள் வெளிச்சந்தையில் ரூ. 1 கோடி மதிப்புடையதாகும். இந்த செம்மரக்கட்டைகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்றும், இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வேலூர் மண்டல கூடுதல் தலைமை வனப் பாதுகாப்பாளர் சேவாசிங் தெரிவித்தார்.
இந்நிலையில், செம்மரக்கட்டைகளுடன் கூடிய வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன பழுது பார்ப்பு நிலைய உரிமையாளரான கணியம்பாடி அருகே குரும்பப்பாளையத்தைச் சேர்ந்த இந்தியன்(30) என்பவரை வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வனத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். மேலும், இந்த செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்புடைய வேன் உரிமையாளரான ஒசூரைச் சேர்ந்த பெருமாள் உள்பட இருவரையும் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திரத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை பல இடங்களுக்கும் கடத்திச் செல்லப்படுகிறது. வனத்துறை, போலீஸாரின் கவனத்தை திசைதிருப்ப இந்த வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் வேனை நிறுத்தி விடுகின்றனர். பின்னர், சோதனை குறைந்ததும் வேனை எடுத்துச் சென்று விடுகின்றனர். அந்த வகையில், செம்மரக்கட்டைகடத்தல் கும்பலுக்கு உதவியதன் அடிப்படையில் இந்த வாகன பழுது பார்ப்பு நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள வேன் உரிமையாளரான ஒசூரைச் சேர்ந்த பெருமாள் உள்பட இருவரைத் தேடி வருகிறோம் என்றனர்.

Label