OUR CLIENTS
பாலாற்றின் குறுக்கே மேலும் 21 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு- விவசாயிகள் அதிர்ச்சி!
பாலாற்றின் குறுக்கே மேலும் 21 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு- விவசாயிகள் அதிர்ச்சி! Posted on 13-Nov-2018 பாலாற்றின் குறுக்கே மேலும் 21 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு- விவசாயிகள் அதிர்ச்சி!

வாணியம்பாடி, நவ.13-

ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதியில் பாலாற்றின் குறுக்கே மேலும் 21 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
வட தமிழ்கத்தின்  5 மாவட்டங்களுக்கு நீர் அதாரம் தரக்கூடிய பாலாறு கர்நாடக மாநிலம், நந்திதுர்கம் மலைப் பகுதியில் உற்பத்தி ஆகிறது. பின்னர் ஆந்திர மாநிலம், குப்பம் வழியாக சுமார் 36 கிலோ மீட்டர் பயணித்து  தமிழகத்தில் புல்லூர் ஊராட்சியில் தொடங்கி வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக சுமார் 222 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து கடைசியாக சதுரங்கப்பட்டினம் அருகில் வாயிலூர் பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்த பாலாற்று நீரை நம்பி தமிழகத்தில் மட்டும் இரண்டரை லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர் தொலைவு பாயும் பாலாற்றின் குறுக்கே அந்த அரசு கடந்த 1996ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை சுமார் 22 இடங்களில் தடுப்பணைகள் கட்டியுள்ளது. அந்த தடுப்பணைகள் 5 அடி உயரம் முதல்  7 அடி வரை கட்டப்பட்டு இருந்தது. கடந்த 2014ம் ஆண்டு முதல் அந்த தடுப்பணைகள் 12 அடி முதல்  40 அடி வரை அதன் உயரத்தை உயர்த்தி அணைகளாக மாற்றியுள்ளது. இந்த ஆண்டு சரிவர மழை பெய்யாததாலும், பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை அடிக்கப்பட்டதாலும் பாலாறு பாலைவனமாக காட்சி அளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருவதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிப்படைந்தது. பெரும்பாலான விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டனர். 
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் தொகுதியான சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் பாலாற்றின் குறுக்கே 21 தடுப்பணைகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குப்பம் தொகுதியில் உள்ள குப்பம், வீ. கோட்டா, சாந்திபுரம், ராம்குப்பம் ஆகிய 4 மண்டலங்களுக்கு இடையே செல்லக்கூடிய பாலாற்றின் மீது 21 தடுப்பணைகள் கட்ட நீர் பாசன துறை சார்பில் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியில் அணைகள் கட்டுவது மட்டுமின்றி ஏற்கனவே உள்ள தடுப்பணைகளை பலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வட தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகள் பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும், விவசாயம் பாதிக்கப்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே மேலும் 21 தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒட்டுமொத்தமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசு ஆந்திர அரசு அணைக்கட்டுவதை தடுக்கப் போகிறதா அல்லது வேடிக்கை பார்க்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label