OUR CLIENTS
பெண்கள் & குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மார்க்சிஸ்ட் கோரிக்கை.
பெண்கள் & குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மார்க்சிஸ்ட் கோரிக்கை. Posted on 14-Nov-2018 பெண்கள் & குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மார்க்சிஸ்ட் கோரிக்கை.

சென்னை, நவ.14-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் நேற்று சென்னையில் தொடங்கியது.

மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
சேலம் தளவாய்ப்பட்டி தலித் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்பட மறுத்து பெற்றோரிடம் சொல்லியதை ஒட்டி, அவளது கழுத்தை தினேஷ் என்பவர் அறுத்து, துண்டான தலையை வீதியில் போட்ட பயங்கர வன்முறையின் ஈரம் காய்வதற்கு முன்னேயே, அரூர் ஒன்றியம் சிட்லிங் கிராமத்தில் 17 வயது பழங்குடியின மாணவி, கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் விளைவாக மரணமடைந்த செய்தி இடியென இறங்கியிருக்கிறது.
இதற்கிடையே திருச்சியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு அதிமுக பிரமுகரால் பாலியல் தொல்லை, திருப்பூரில் 4 வயது குழந்தை பாலியல் வல்லுறவு, தஞ்சை திருபுவனத்தில் 21 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வல்லுறவு, புதுக்கோட்டையில் 19 வயது பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், அதில் 3 கொலைக் குற்றங்களும் நடந்துள்ளன. இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்டு சோகத்தின் விளிம்பில் நிற்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
சமூகத்தில் காலம் காலமாக நிலவுகின்ற ஆண் மேலாதிக்கம், சாதி வெறி உள்ளிட்ட போதை பழக்கம் போன்ற காரணிகள் இவற்றுக்குப் பின்புலமாக இருக்கின்றன. தளவாய்பட்டி வன்முறையில் முதலில் போக்சோ பிரிவுகள் காவல்துறையால் சேர்க்கப்படவில்லை. சிட்லிங் பழங்குடியின மாணவிக்கு நேர்ந்த கொடுமையில், மருத்துவ சிகிச்சை அளிக்காமல் காப்பகத்துக்கு அனுப்பிவிட்டு, உடல்நிலை மோசமான பிறகு மருத்துவமனைக்கு அனுப்பிய காரணத்தால் உரிய சிகிச்சை இல்லாமை மாணவியின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது.
முதலில் புகாரை வாங்க மறுத்து தனது கடமையை செய்யாதது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோட்டப்பட்டி ஆய்வாளரின் மோசமான அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியது. பாதுகாப்பான கழிப்பறை இல்லாத சூழலில் தான், அம்மாணவி புதர் பகுதிக்கு சென்றிருக்கிறார். இந்நிலை குறித்தெல்லாம் மாவட்ட நிர்வாகம் கிஞ்சித்தும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மருத்துவமனை அதிகாரிகள் அனைவருமே இதில் குற்றவாளிகள் எனக் கருதப்பட வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் 304 பிரிவில் இவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும். ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணனை இடமாற்றம் செய்தால் மட்டும் போதாது, இபிகோ 166&ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீ டூ இயக்கத்தின் பகுதியாக தமிழகத்திலும் கடந்த காலத்தில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டோரின் குரல்கள் உரத்து ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. தமக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளைத் துணிச்சலுடன் வெளியே சொல்லும் இந்தக் குரல்களுக்கு வலு சேர்க்க வேண்டும்.
மொத்தத்தில், தமிழக அரசோ முதல்வரோ, அதிர வைக்கும் இத்தகைய குற்றங்கள் குறித்து ஓர் அறிக்கை கூட வெளியிடுவதில்லை. அரசின் காவல்துறை, மருத்துவ துறையின் இதயமற்ற அணுகுமுறைக்கும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு இல்லாததற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் குற்றமிழைத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Label