OUR CLIENTS
எஸ்.ஐ., ஆபாசமாக திட்டியதால் பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி!
எஸ்.ஐ., ஆபாசமாக திட்டியதால் பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி! Posted on 14-Nov-2018 எஸ்.ஐ., ஆபாசமாக திட்டியதால் பிளஸ் 2 மாணவி தற்கொலை முயற்சி!

பூவிருந்தவல்லி, நவ.14-

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக திட்டியதால் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஹேமா மாலினி 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் வசிப்பவர் சுடலைமணி. கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஹேமமாலினி, சுரேகா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சுடலைமணிக்கும் அவருடைய வீட்டுக்கு அருகில் வசிக்கும் சேகர் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுடலைமணி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் சேகர் மீது புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சுடலைமணி ஆன்லைன் மூலமாகவும் சேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கூறியுள்ளார். அப்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திருமுல்லைவாயல் காவல் உதவி ஆய்வாளர் பண்டாரி சர்மா, சுடலைமணி  வீட்டுக்குச் சென்று புகாரை திரும்ப பெறுமாறு சுடலைமணி மனைவி மகராஜ் மற்றும் மூத்தமகள் ஹேமாமாலினியை தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல், புகாரை திரும்ப பெறாவிட்டால் இருவர் மீதும் விபச்சார வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் எனவும், காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி ஹேமமாலினி அவருடைய வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி ஹேமமாலினி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மாணவி ஹேமமாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கால்கள் மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். மேல்சிகிச்சைகாக மாணவி ஹேமமாலினி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மீது காவல் துறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label