OUR CLIENTS
இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி
இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி Posted on 15-Nov-2018 இலங்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி

கொழும்பு, நவ.15-   
 
இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் கடும் அமளி ஏற்பட்டது. வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். கடும் அமளியை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கேயின் உதவியுடன், அதிபராகப் பதவியேற்றார் மைத்ரிபாலா சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன. 3 ஆண்டுகள் கடந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த அக்டோபர் 26ஆம் தேதி திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்துவைத்தார். இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதனால் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனா முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, நவம்பர் 14ஆம் தேதி (நேற்று) கூடும் என்று அறிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். திடீர் திருப்பமாக, மகிந்த ராஜபக்சே, நேற்று முன்தினம் சிறிசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்பிக்கள் 50 பேரும் கட்சி மாறினர். அவர்கள் அனைவரும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்கள்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்ததை எதிர்த்து இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர் ஒருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தனர். மேலும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று(நேற்று) கூட்டப்படும் என்று சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார்.
பரபரப்பான இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று காலை கூடியது. அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக, ரணில் விக்ரமசிங்கே கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்மீது வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாததால் வாக்கெடுப்பு நடத்தவிடாமல் அவரது ஆதரவு எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கு இடையே, மஹிந்தா ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசு பெரும்பான்மை இன்றி தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். சபாநாயகர் அறிவிப்பை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் கடும் கூச்சல் குழப்பம் செய்தனர். இதன் பிறகு அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

Label