OUR CLIENTS
சீல் வைக்கப்பட்ட தோல் ஆலைகள் மீண்டும் இயங்குவதாக புகார்!
சீல் வைக்கப்பட்ட தோல் ஆலைகள் மீண்டும் இயங்குவதாக புகார்! Posted on 15-Nov-2018 சீல் வைக்கப்பட்ட தோல் ஆலைகள் மீண்டும் இயங்குவதாக புகார்!

ஈரோடு, நவ.15-

ஈரோடு அருகே தோல் மற்றும் சாய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் 8 மாதங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட தோல் ஆலைகள் உரிய அனுமதியின்றி மீண்டும் இயங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. 
ஈரோடு - சித்தோடு செல்லும் சாலையில் உள்ள நரிப்பள்ளம், ஈ.எம்.எஸ். நகர் , கொங்கம்பாளையம், மாமரத்துபாளையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளிலிருந்து முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றப்படுவதாகவும், அவை நேரிடையாக நீர்நிலைகளில் கலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி முற்றிலுமாக மாசடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், குடிநீர் மற்றும் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் நீரும் கெட்டுப்போய், பச்சை நிறமாகக் காட்சியளிக்கிறது. 
மாசுபட்ட நீரை பொதுமக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் விவசாயிகள் பயிரிட்டுள்ள தென்னை, சோளம், மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவையும் கருகியுள்ளன. கெட்டுப்போன நீரை அருந்து கால்நடைகள் நோய்க்குள்ளாவதால், விலை கொடுத்து தண்ணீரை வாங்கி கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர் விவசாயிகள். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலைகளில் இருந்து வெளியேற்றபடும் கழிவுகளை தடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். 
புகார் குறித்து நேரிடையாக விசாரணை நடத்திய அதிகாரிகள், தோல் ஆலைகளுக்கு சீல் வைத்து சென்றனர். இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட ஆலைகளை அதன் உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி முறைகேடாக இயக்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து நிலையில், மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு துறையினரும் ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Label