தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது அலட்சியப் போக்குடன் நடக்கும் கோழிப்பண்ணையாளர்கள்! Posted on 15-Nov-2018
வேலூர், நவ.15-
தமிழகத்தில் வேகமாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய கால்நடைத்துறையினர் தெனாவெட்டுடன் நடந்து கொள்கின்றனர். கோழிப்பண்ணையாளர்கள் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு புதுவித வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆங்காங்கே டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஒருபுறம் வேகமாக பரவி வருகிறது. பலர் இறந்தும் வருகின்றனர். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் அவரவர் எல்லைப் பகுதியில் டெங்கு உற்பத்தி செய்யும் ஏடிஎஸ் கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்து வரும் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் பலருக்கும் தெரியாமல் ஒருபுறம் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செவலபுரை அடுத்துள்ள ராஜாபாளையம் கிராமத்தில் அமீர் என்பவர் கோழிப்பண்ணையில் கடந்த வாரம் 2,500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்தன. இவை மர்ம நோய் தாக்கி இறந்ததாக கடந்த 11ம் தேதி மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மர்ம நோய் என்பது பறவைக் காய்ச்சல் என்பது மெல்ல மெல்ல வெளியில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த செய்தி கடந்த 12ம் தேதி காலச்சக்கரம் நாளிதழில் வெளியிடப்பட்டது. இப்படி உயிர்க்கொல்லி நோய் ஒருபுறம் வேகமாக பரவி வருகிறது. பறவைக் காய்ச்சலால் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இறக்கின்றன. இதை கோழிப்பண்ணையாளர்கள் வெளியில் தெரிவிக்காமல் உண்மையை மூடி மறைப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் தீபாவளி பண்டிகையின் போதும் கூட கோழி இறைச்சி கிலோ ரூ.190க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படிப்படியாக கோழி இறைச்சி விலை குறைந்து தற்போது கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டை ஒன்று தலா ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் முட்டை ஒன்றின் விலை தலா ரூ.4.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி பறவைக் காய்ச்சல் நோய் தாககிய கோழிகளை கொண்டு வந்து சத்தமின்றி உறித்து வைத்து கடைகளில் விற்பனை செய்து அமோகமாக கல்லா கட்டி வருகின்றனர் கோழி இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள். இவர்களால் கோழிப்பண்ணையாளர்களும் கொழித்த லாபம் பார்த்து வருகின்றனர். இப்படி டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்று கோழிகளை பறவைக் காய்ச்சல் தாக்கி வருகிறது. அத்துடன் வெண்கழிசல் நோயும் வேகமாக கோழிகளுக்கும், கோழி குஞ்சுகளுக்கும் பரவி வருகிறது. கால்நடை கணக்கெடுக்க வீடுகள்தோறும் கால்நடைத் துறையினர் வருகை தருவார்கள் என்று அரசு அறிக்கை விடுகிறது. ஆனால் கால்நடைத்துறையில் பணியாற்றுவோர் ஏதோ கடமைக்கு பணியாற்றுகின்றனர். குறிப்பாக கால்நடை மருத்துவமனைகளில் பணியாற்றுவோர் பணம் தருபவர்கள் இல்லம் நாடி சென்று சேவை செய்கின்றனர். பணம் தராத விவசாயிகளின் கால்நடைகளை திரும்பி கூட பார்ப்பதில்லை. தனியார் செல்லப்பிராணிகள் வளர்த்து விற்பனை செய்யப்படும் கடைகளை மட்டும் நாடுகின்றனர்.
இதனால் கண்களுக்கு தெரியாமல் பறவைக் காய்ச்சல் இருப்பதால் கோழி இறைச்சியை சாப்பிடும் அசைவ பிரியர்கள் மறைமுகமாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இது பலருக்கும் தெரிவதில்லை. வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் கோழிகள் கொண்டு வரப்படுகின்றன. அவை கிலோ ரூ.60 முதல் வியாபாரிகளுக்கு தரப்படுகிறது. இவற்றை வாங்கி இருமடங்கு விலை வைத்து விற்பனை செய்து பண மழையில் வியாபாரிகள் நனைகின்றனர். ஆதலால் கோழிகளுக்கு வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோயை கால்நடைத்துறையினர் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைத்து கோழிகளையும், கோழிக்குஞ்சுகளையும் பரிசோதித்து சிகிச்சை அளிக்க முன் வர வேண்டும். அதற்கு பின்னர் மனிதர்கள் சாப்பிட தரமான பறவைக் காய்ச்சல் நோய் தாக்காத கோழிகளை உணவுக்கு பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும். ஏனோ தானோ என்று பணியாற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் முதல் கம்பவுண்டர் வரையில் யாராக இருந்தாலும் அவர்கள் துறை ரீதியான எடுக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, குடியாத்தம், வாலாஜா, ஆற்காடு, திகருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அதிகம் பரவுவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் செயல்பட்டு பறவைக் காய்ச்சல் தாக்கிய கோழிகளையும், கோழி இறைச்சியையும், கோழி முட்டைகளையும் பொதுமக்கள் சாப்பிட விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் விவரம் அறிந்த கோழி வளர்க்கும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையையும், தமிழக அரசு கால்நடைத்துறையின் செயல்பாடுகளையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.