OUR CLIENTS
இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே - ராஜபக்சே எம்பிக்களுக்கு இடையே கைகலப்பு சபாநாயகர் மீது தாக்குதல்
இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே - ராஜபக்சே எம்பிக்களுக்கு இடையே கைகலப்பு சபாநாயகர் மீது தாக்குதல் Posted on 16-Nov-2018 இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே - ராஜபக்சே எம்பிக்களுக்கு இடையே கைகலப்பு சபாநாயகர் மீது தாக்குதல்

கொழும்பு, நவ.16-

இலங்கை நாடாளு மன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ராஜபக்சவின் ஆதரவு எம்பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பிரதமர் ரணிலை அதிபர் சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவில்லை. எம்பிக்களை இழுக்கும் முயற்சியும் பலனளிக்காததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். அத்துடன் வரும் ஜனவரி 5ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகள் மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்ததை எதிர்த்து இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது. மேலும், 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
பரபரப்பான இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று முன்தினம் காலை கூடியது. அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக, ரணில் விக்ரமசிங்கே கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சே அரசு பெரும்பான்மை இன்றி தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். சபாநாயகர் அறிவிப்பை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் கடும் கூச்சல் குழப்பம் செய்தனர். இதன் பிறகு அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் பாராளுமன்றம் கூடியது. நாடாளுமன்றக் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா, நேற்று முந்தைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்‌சே தோல்வியடைந்து விட்டார். அதனால் அவரை பிரதமாக ஏற்கமுடியாது என அறிவித்தார். இதை எதிர்த்த ராஜபக்சே தரப்பு எம்பிக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ரணில் ஆதரவு எம்பிக்களுக்கும் ராஜபக்‌சே ஆதரவு எம்பிக்களுக்கும் இடையே கைகலப்பு நிலவியது.
ரணில் விக்ரமசிங்கேவின் அழுத்தத்தினால் தான் சபாநாயகர் இவ்வாறு கூறுகிறார் என ராஜபக்‌சே ஆதரவு எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டார். இருந்தும் அவரின் முயற்சி பலனளிக்கவில்லை. அனைத்து எம்பிக்களும் எழுந்து போராட்டம் நடத்தியதால் இலங்கை நாடாளுமன்றமே போர்க்களமாக மாறியது.
உச்சகட்ட பரபரப்பினால் நாடாளுமன்றம் வரும் 21ஆம் தேதிவரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் அதிபர் மைத்திரிபாலா சிறிசேன கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Label