OUR CLIENTS
மரண தண்டனை விவகாரம் ஐநாவின் வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு!
மரண தண்டனை விவகாரம் ஐநாவின் வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு! Posted on 16-Nov-2018 மரண தண்டனை விவகாரம் ஐநாவின் வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு!

நியூயார்க், நவ.16-

மரண தண்டனை தொடர்பாக ஐநா தாக்கல் செய்த வரைவு தீர்மானம் ஐநா பொதுசபையில் அதிக வாக்குகள் பெற்று நிறைவேறியது. இந்தியா இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.
ஐ.நா. பொதுச்சபையின் 3-வது கமிட்டியான சமூகம், மனிதாபிமானம் மற்றும் கலாச்சார விவகாரங்கள் கமிட்டி சார்பில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த வரைவு தீர்மானம்  தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்மானத்தில் அனைத்து நாடுகளும் சர்வதேச விதிமுறைகளை மதித்து, மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் உரிமைகளை மதிக்க வேண்டும். பாரபட்சமான சட்டங்களின் அடிப்படையில் அவை விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது ஐநா பொதுசபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் மரண தண்டனை வரைவு தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட்டுகளும் கிடைத்தன. இந்த வாக்கெடுப்பில் 30 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட இந்தியா வரைவு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.  அதற்கான காரணம் குறித்து ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக குழுவின் முதன்மை செயலாளர் பலோமி திரிபதி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இந்த வரைவு தீர்மானம் மரண தண்டனையை ஒழிக்கும் நோக்கத்திலும், அதை தற்காலிகமாக ஒத்திவைக்கவும் உருவாக்கப் பட்டுள்ளது. இது இந்திய சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த தீர்மானத்துக்கு இந்தியா தன் முழு எதிர்ப்பை தெரிவித்தது என பலோமி திரிபதி கூறினார். மேலும் கூறுகையில் ''இந்தியாவில் மிகவும் அரிதாகவே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்திய சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நடக்கும் குற்றங்களுக்கு மட்டுமே இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது''
''இந்தியாவில் குற்றவாளிகள் மீதான வழக்குகள் சுதந்திரமாக செயல்படும் நீதிமன்றத்தில் நியாயமாக விசாரிக்கப்படுகின்றன. குற்றவாளி தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்கவும் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் அதை மறுபரிசீலனைக்காக மேல்முறையீடு செய்யவும் உரிமைகள் வழங்கப்படுகின்றன'' என பலோமி திரிபதி தெரிவித்தார். மரண தண்டனை தொடர்பான வரைவு தீர்மானம் நிறைவேறிய பின் ஐநா பொதுசபையில் அந்த தீர்மானம் குறித்து தீவிரமான விவாதம் நடந்தது.
அதன் பின் 34 நாடுகளின் சார்பாக சிங்கப்பூர் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திருத்தம் அனைத்து நாடுகளுக்கும் தங்கள் சொந்த சட்ட அமைப்பை உருவாக்க உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தியது. இந்த திருத்தத்தின் மீது ஐநா பொதுசபையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. அதில் திருத்தத்திற்கு ஆதரவாக 96 வாக்குகளும் எதிராக 73 வாக்குகளும் கிடைத்தன. `14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அதிக வாக்குகள் கிடைத்ததால் இந்த திருத்தத்திற்கு ஐநா பொதுசபை கமிட்டி ஒப்புதல் வழங்கியது.
வாக்கெடுப்பில் இந்தியா இந்த திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. அனைத்து நாடுகளுக்கும் தங்கள் சொந்த சட்ட அமைப்பை உருவாக்கவும் தண்டனைகளை வரையறை செய்யவும் உரிமை உண்டு. அதன் காரணமாகவே இந்தியா இந்த திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது என்று பலோமி திரிபதி கூறினார்.

Label