OUR CLIENTS
வேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி!
வேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி! Posted on 16-Nov-2018 வேலூரில் மாணவிக்கு சான்றிதழை தர  பேரம் பேசும் விமல் நர்சிங் கல்லூரி!

வேலூர், நவ.16- 

வேலூர் விமல் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியின் சான்றிதழை திரும்பத் தராமல் கல்லூரி நிர்வாகம் கடந்த 5 நாட்களாக இழுத்தடிக்கும் கொடுஞ்செயலை செய்து வருகின்றது. இதனால் அந்த மாணவி மன வேதனை அடைந்துள்ளார்.
வேலூரில் வசிக்கும் ஏழைத்தொழிலாளி சீனிவாசன். அவரது மகள் பாரதி. பி.எஸ்.சி. நர்சிங் படிக்க விரும்பியதால் அரசு இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கும் நர்சிங் கல்லூரியில் பயில பதிவு செய்து காத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்ற தகவலின் காரணமாக வேலூரையடுத்த நெல்வாய் பகுதியிலுள்ள செயின்ட் ஜான்ஸ் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான டாக்டர் ஏ.விமல் காலேஜ் ஆஃப் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் சேர்ந்துள்ளார் பாரதி. கல்லூரியில் சேர்ந்து 20 நாட்கள்தான் ஆகிறது. ஆனால் கல்லூரியில் கோச்சிங் சரியில்லை என்று பாரதி கருதினார். இதனால் கல்லூரிக்கு செல்ல விரும்பவில்லையாம் பாரதி. இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் விசாரித்ததில் இந்த நர்சிங் கல்லூரியில் கோச்சிங் சரியில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு பெற்றோர் ரூ.37 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளோமே என்று மகள் பாரதியிடம் சமாதானம் சொல்லியுள்ளனர். 
இந்நிலையில் கடந்த வாரம் நவம்பர் 10ம் தேதியன்று அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டின்படி  ராணிப்பேட்டையில் உள்ள  தனியார் நரசிங் கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தகவல் அறிந்து ராணிப்பேட்டையில் உள்ள நர்சிங் கல்லூரிக்குச் சென்றுள்ளார். அங்கு சேர அசல் மாற்றுச்சான்றிதழ் தேவைப்பட்டதால் நெல்வாய் கல்லூரிக்கு வந்து அசல் மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளார்.
ஆனால் கல்லூரி நிர்வாகம், கல்லூரி தாளாளர் விஜயகுமார், மாணவி பாரதியின் அசல் சான்றிதழை தர மறுத்துள்ளார். பாரதியின் மாற்றுச்சான்றிதழை சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மாற்றுச்சான்றிதழ் பெற ரூ.7500 கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளனர். மாணவி பாரதியும் ரூ-.7500 சான்றிதழ் பெற கட்டணம் செலுத்தியுள்ளார். ஆனால் ரூ-.7500 பெற்றுக்கொண்டு அசல் மாற்றுச்சான்றிதழை தராமல் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து அலைகழித்துள்ளனர். அத்துடன் 3ஆண்டு கட்டணத்தையும் முழுவதும் செலுத்தினால் மட்டுமே அசல் சான்றிதழை தர இயலும் என்று மாணவியிடமும், பெற்றோர்களிடமும் மிரட்டும் விதத்திலும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி கடுஞ்சொற்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை கல்லூரியில் சான்றிதழை சமர்ப்பிக்க இன்றே (16ம் தேதி) கடைசி நாள் என்பதால் மாணவியும் அவர்களது பெற்றோரும் கடும் மன உளைச்சல் அடைந்தனர். அந்த மாணவியின் எதிர்காலத்தை இந்த கல்வி நிறுவனம் கேள்வி குறியாக்கியுள்ளது. 
நெல்வாய் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி நிர்வாகம், தங்களிடம் கேட்டவுடன் சான்றிதழை கொடுத்துவிட்டால் தங்களது இமேஜ் பாதிக்கும் என்று நினைத்து அந்த மாணவியை மீண்டும் தங்களிடம் தொடர்ந்து படிக்க வற்புறுத்துகின்றனர் என மாணவி தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்வாயில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியின் கல்விக்கட்டணத்தை விட ராணிப்பேட்டையில் உள்ள நர்சிங் கல்லூரியில் கட்டணம் குறைவு என்பதாலும் தமிழகத்தின் பிரபல மருத்துவமனையின் அங்கமான இக்கல்லூரியில் பயில விரும்பும் மாணவி பாரதியின் ஆசை பகல் கனவாகிவிடும் என தெரிகிறது. அதிக கட்டணம், குறைவான கல்வி வசதிகள், இதர கட்டணங்கள் என்ற பெயரில் அவ்வப்போது பணம் கறப்பது, ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது என கொட்டமடிக்கும் தனியார் கல்லூரிகளை கடிவாளமிட்டு கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இதேபோன்று ஒர தனியார் கல்லூரியில் பேராசிரியர் பணியாற்றிய ஒருவருக்கு, எம்ஐஇடியில் பேராசிரியர் பணி கிடைத்தது. அந்த இளைஞர் நகலை கொடுத்து விட்டு எம்ஐஇடியில் பணிக்கு சேர்ந்து விட்டார். பின்னர் முன்னதாக தான் பணியாற்றிய அந்த தனியார் கல்லூரிக்கு வந்து தனது சான்றிதழ்களை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த கல்லூரி சான்றிதழ்களை தர மறுத்ததால் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அடங்குவதற்கு முன்பாக வேலூரில் நர்சிங் மாணவிக்கு இப்படி சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கப்படுகிறது. 
இதுபோன்று வியாபார நோக்குடன் செயல்படும் கல்வி நிறுவனத்தால் பல மாணவிகள் உயிர்துறக்கும் சம்பவம் ஆங்காங்கே அரங்கேறியுள்ளது. இருப்பினும் கல்வி நிறுவனங்கள் திருந்துவதாக இல்லை. நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள், மாணவர்கள் கையில் என்றால், அந்த மாணவர்களின் எதிர்காலம் கல்வி நிறுவனங்கள் கையில் என்பதை மறந்து வியாபார நோக்குடன் செயல்படும் இதுபோன்ற நிறுவனங்களின் உரிமங்களை அரசு ரத்து செய்யவேண்டும். அப்போதுதான் கல்வி நிறுவனங்கள் முறையாக செயல்படும். 
இதுகுறித்து தமிழக அரசு தனியார் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை கொடுத்து மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும்.

Label