OUR CLIENTS
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு Posted on 17-Nov-2018 கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

  சென்னை, நவ.17-
      
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்று முன்தினம் இரவு நாகைக்கு அருகே கரையைக் கடந்தது. இதனால், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, கஜா புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் நாகைக்கு அருகே கரையைக் கடந்தது. அப்போது 110 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக பதிவாகியுள்ளது. இதனால் நாகை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. புயல் மற்றும் கன மழையால் 23 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. 
கஜா புயல் கரையைக் கடந்ததும், நேற்று காலை 11 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன் ஒரு பகுதி தற்போது திண்டுக்கல் பகுதியில் மையம் கொண்டது. அதன் காரணமாக திண்டுக்கல், தேனி, கம்பம், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் எவ்வாறெல்லாம் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று புயல் வருவதற்குமுன்பே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உரிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டு வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விரைந்து தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. முழுமையாக அறிந்த பிறகே அவர்களுக்கான நிவாரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். மீன்வளத்துறை, வருவாய்த்துறை இரண்டும் சேர்ந்து கரையோரம் தரையோரமாக வைக்கப்பட்டிருந்த படகுகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது.
இதுவரை 11 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்கம்பங்கள் உள்ளிட்ட அனைத்து சேதாரங்கள் குறித்த கணக்கெடுப்பும் நடைபெற்று வருகின்றன. எவ்வளவு இழப்பு என்பது விரைவில் கணக்கிடப்படும். இயற்கைச் சீற்றத்தில் மக்களைப் பாதுகாக்க அனைத்து துறையினருக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களிலேயே தங்கியிருந்து பாதுகாப்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொள்ளும்படி அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'கஜா' புயலால் அதிக மரங்கள் சாலையில் சாய்ந்திருக்கின்றன. அப்படி சாய்ந்த மரங்களையெல்லாம் அகற்றும் பணிகளில் எல்லாம் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சாலையில் சாய்ந்த மரங்களையும் அறுத்து அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே அமைச்சர்கள் அங்கேயே தங்கிப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அதன்படி அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்கி மேற்கொண்டு வருகின்றனர். 
வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி புயலால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று முழுவீச்சில் ஆய்வுசெய்து வருகிறார். புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்.  மக்கள் அச்சப்படத் தேவையில்லை. புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன். சேத விவரங்கள் பெறப்பட்டவுடன் மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்படும்''. இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.
புயல் மற்றும் கன மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 'இதுவரை எங்களுக்கு 15 பேர் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.  படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சமும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் வழங்கப்படும்" என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்; அதில் அவர் கூறியிருப்பதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 185 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், புயல் பாதித்த பகுதிகளில் மக்களை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று பரிசோதிக்க 216 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
முதற்கட்ட அறிக்கைப்படி சுமார் 13,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பழுதான மின்கம்பங்களை மாற்றுவதற்காக ஏற்கனவே 7,000 மின்கம்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5,000 மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. புயலுக்கு முன்னர் 81,948 பேர் வெளியேற்றப்பட்டு 471 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், உணவு, பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
புயலால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து கணக்கிடு செய்யுமாறு ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என அதில் தெரிவித்துள்ளது.

Label