OUR CLIENTS
ஹிலாரியின் இமெயில் தகவல்களை வெளியிடுமாறு அமெரிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவு
ஹிலாரியின் இமெயில் தகவல்களை வெளியிடுமாறு அமெரிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவு Posted on 26-Aug-2016 ஹிலாரியின் இமெயில் தகவல்களை வெளியிடுமாறு அமெரிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவு

வாஷிங்டன்:
அமெரிக்காவில் 2009-13 காலகட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி பதவி வகித்தவர் ஹிலாரி கிளிண்டன். வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தபோது, தனது தனிப்பட்ட இமெயில் கணக்கினை அரசு பணிகளுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹிலாரி கிளிண்டன், “தனிப்பட்ட இமெயில் கணக்கை அரசுப்பணிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் நான் இரண்டு இமெயில் கணக்குகளை பராமரித்து வந்திருக்க வேண்டும். ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்கும், மற்றொன்றை அரசுப்பணி தொடர்பானவற்றுக்கும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்தது தவறுதான். அதற்காக நான் வருந்துகிறேன். நான் அந்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன்” என கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் இவர் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் அரசு அலுவல்களுக்கு தனது தனிப்பட்ட ‘இமெயில்’ முகவரியை பயன்படுத்தியது தொடர்பாக அவரது அரசியல் எதிரிகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக, இந்த இமெயில் சர்ச்சை தொடர்பாக ஹிலாரியிடம் விசாரணை நடத்தி அவரை அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இமெயில்களை அமெரிக்க போலீசின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் நீக்கியுள்ளதாக குடியரசு கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக, ஹிலாரியின் அரசு உதவியாளர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தேசிய புலனாய்வு போலீசார் (எப்.பி.ஐ.) ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். ஹிலாரியிடமும் சமீபத்தில் விசாரித்தனர்.

இதற்கிடையே, ஹிலாரி கிளிண்டனின் ரகசிய இமெயில்களை பகிரங்கமாக வெளியிடப் போவதாக ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று முன்தினம் மிரட்டல் விடுத்துள்ளார். ‘விக்கிலீக்ஸ்’ வெளியிடவுள்ள ரகசியங்கள் தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரசாரம் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை எல்லாம் தலைகீழாக புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமையின்கீழ் இவ்விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்துவரும் அமெரிக்க நீதிமன்றம், ஹிலாரி கிளிண்டன் தனது பதவிக்காலத்தில் பயன்படுத்திய தனிப்பட்ட இமெயில்களை வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதியில் இருந்து வெளியிட தொடங்க வேண்டும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

Label