OUR CLIENTS
எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி!
எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி! Posted on 17-Nov-2018 எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக கழுதூர் கணேசன் போர்க்கொடி!

கடலூர், நவ.17-

திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளார் கழுதூர் கணேசன்.
தமிழகத்தின் சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் தந்து தந்தை பெரியார் வழியில் தோன்றிய திராவிட கட்சிகளில் இன்று சாதிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அந்தந்த இடங்களில் சாதியம் என்பது தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறது. கடலூர் மாவட்ட திமுகவில் பல ஆண்டுகளாக தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். இவரை எதிர்த்து கடலூர் மாவட்டத்தில் திமுகவில் அரசியல் செய்த பலரையும் இருக்கும் இடம் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.
அந்த எம்ஆர்கே பன்னீர்செல்வத்தையே எதிர்த்தவர்தான் தற்போதைய திட்டக்குடி தனி தொகுதி எம்எல்ஏ கழுதூர் கணேசன். ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக செயலாளராக எம்ஆர்கே பன்னீர்செல்வம் இருந்தவரை கழுதூர் கணேசனை தலையாட்டும் பொம்மையாகத்தான் வைத்திருந்தனர். காரணம் கட்சியில் இருவரும் ஒன்று என்றாலும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தான் ஒரு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கழுதூர் கணேசனை பல நேரங்களில் தட்டி வைத்தேயிருந்தார். ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் திமுகவில் பெரிய மாவட்டங்களாக இருந்த இடங்களை இரண்டாக பிரித்து கூடுதல் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். 
அந்த நேரத்தில் கடலூர் மாவட்டத்தை கிழக்கு, மேற்காக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளராக எம்ஆர்கே பன்னீர்செல்வத்தையும், மேற்கு மாவட்ட செயலாளராக கழுதூர் கணேசனும் நியமிக்கப்பட்டனர். கழுதூர் கணேசனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்க முக்கிய காரணமாக கருதப்பட்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆ.ராசா என்று பரவலாக பேசப்பட்டது. ஏற்கனவே எம்ஆர்கே பன்னீர்செல்வமும், அவருடைய மகனும் சேர்ந்து கொண்டு சர்வாதிகார தனமாக நடந்து கொண்டனர். இதனால் பலரும் தங்கள் மனக்குமுறல்களை யாரிடம் சொல்வது என்று இருந்தபோதுதான் கணேசனுக்கு அந்த பதவி கிடைத்தது. கணேசனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்ததுமே எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடம் இருந்தவர்கள் கணேசனிடம் தஞ்சம் அடைந்தனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத எம்ஆர்கே பன்னீர்செல்வம் தரப்பு கணேசன் அதிமுகவுக்கு தாவப்போகிறார். அமைச்சராக ஆகப்போகிறார் என்று கட்டுக் கதைகளை கட்டி வந்தனர். 
ஆனால் இது எதுவுமே நடக்காததால் விரக்தியின் விளிம்புக்கே வந்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஒதுங்கி கொண்டதாக தெரிகிறது. திட்டக்குடி தனி தொகுதி எம்எல்ஏ கழுதூர் கணேசன் திடீர் அரசியல்வாதி அல்ல. ஏற்கனவே இவர் கடலூர் எம்பியாகவும், மங்களூர் தொகுதி எம்எல்ஏவாகவும், மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும், மங்களூர் ஒன்றிய செயலாளராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர், சிறப்பாக பணியாற்றியவர் என்பதால்தான் மாவட்ட செயலாளர் பதவியை கருணாநிதி வழங்கினார். தனக்கு கொடுத்த பதவியை வைத்துக் கொண்டு கட்சியை வளர்த்து வருவதுடன் அதிமுகவை சார்ந்த எம்பி அருண்மொழித்தேவனுக்கே சவால் விடும் அளவுக்கு கட்சியை வளர்த்திருக்கிறார் என்பதுதான் உண்மை. வரும் பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் கழுதூர் கணேசனுடைய பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்படி திறமைமிகு ஒருவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு சாதிய சாயம் பூசி ஒதுக்க நினைத்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் இருக்கும் இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்ப கடலூர் மாவட்ட திமுகவில் நிலைமை மெல்ல மெல்ல மாறி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்ட திமுகவில் தனிக்கவனம் செலுத்தி சாதிய பிரச்னைக்கு நிரந்தரமாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று திமுகவில் உள்ள உடன்பிறப்புகள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டாலினின் இறுதி முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label