OUR CLIENTS
தூத்துக்குடி மாநகராட்சியில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்க திட்டம்!
தூத்துக்குடி மாநகராட்சியில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்க திட்டம்! Posted on 17-Nov-2018 தூத்துக்குடி மாநகராட்சியில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்க திட்டம்!

தூத்துக்குடி, நவ.17-

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2 இடங்களில் பல்வகை வாகன நிறுத்த முனையம் (மல்டிலெவல் பார்க்கிங்) கட்டும் பணி நடைபெற உள்ளது. 
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி மையப் பகுதியான பாளைரோடு மாநகராட்சி மைய அலுவலகம் அருகில் பழைய பேருந்து நிலையம், தனியார் காய்கனி மொத்த விற்பனை அங்காடி மற்றும் பூ மார்கெட் ஆகியன செயல்பட்டு வருகின்றன. மாநகர பகுதி பொது மக்கள் மற்றும் தூத்துக்குடி மாநகரை சுற்றியுள்ள சிறிய கிராமங்கள் ஆகியவற்றிலிருந்து வரும் பொது மக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்  தினசரி வந்து ஜெயராஜ்ரோடு மற்றும் பாளைரோடு பகுதியில் சந்தைப்படுத்துதல் மற்றும் கொள்முதல் செய்தல் ஆகியன நடைபெற்று வருகின்றபடியால், மேற்படி பகுதி மிகுந்த  போக்குவரத்து நெருக்கடியில் இருந்து வருகிறது. எனவே பொது மக்களின் நலன் கருதி தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகுநகரம் திட்டத்தின் கீழ் பல்வகை வாகன நிறுத்த முனையம் ஒன்று ஜெயராஜ் ரோடு பூமார்கெட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2411 சதுர மீட்டர் பரப்பளவிலும், மற்றொன்று சிதம்பரநகர் மார்க்கெட் பகுதியில் (மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்)  மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 3470 சதுரமீட்டர் பரப்பளவிலும் புதிதாக கட்டப்படவுள்ளன. 
மேற்கண்ட பல்வகை அடுக்கு வாகன நிறுத்தமுனையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உத்தேசமாக ரூ12.00 கோடி மதிப்பீட்டில் மூன்று தளத்தில் 3906 சதுரமீட்டர் பரப்பளவில் ஜெயராஜ் ரோடு பூமார்கெட் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. அதில் தரைதளத்தில்  1038 சதுரமீட்டர் பரப்பளவில் நான்கு கடைகளுடன்,  இரண்டு கழிப்பறை வசதியுடனும், முதல்தளத்தில் 956 சதுரமீட்டர் பரப்பளவில் 12 கடைகளுடன், ஒவ்வொரு தளத்திலும் தலா இரண்டு கழிப்பறை வசதியுடன் இருதளத்தில் சேர்த்து மொத்தம் 110 இருசக்கரவாகன நிறுத்துமிட வசதியுடனும்,  3வது மற்றும் 4வது தளத்தில்  956 சதுரமீட்டர் பரப்பளவில் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் 100 எண்ணம் நிறுத்தும் வசதியுடன் ஜெயராஜ் ரோடு பூமார்கெட் பகுதியில்  கட்டப்படவுள்ளது. அதே போன்று சிதம்பரநகர் மார்கெட் பகுதியில் (மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில்) பல்வகை அடுக்கு வாகன நிறுத்த முனையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உத்தேசமாக ரூ15.33 கோடி மதிப்பீட்டில் மூன்று தளத்தில் 5620 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. 
மேலும் மேற்படி வாகன நிறுத்துமிடத்திற்கு பொது மக்கள் தங்கள் வாகனங்களை இலகுவாக கொண்டு செல்ல ஒவ்வொரு தளத்திலும் சாய்வுதளம் அமைத்து வாகனம் ஏறுமிடம் ஒரு பக்கத்திலும், இறங்குமிடம் ஒரு பக்கத்திலும் கட்டப்படவுள்ளது. மேலும் பொது மக்கள் மற்றும் வயோதிகர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் செல்ல ஏதுவாக மின்தூக்கி (லிப்ட்) வசதியுடன், நடந்து செல்ல மாடிப்படிகளும் கட்டப்படவுள்ளது.. மேற்கண்ட பணிகள்  அனைத்தும் முடிவுபெற்றபின்னர்  மாநகரத்தின் மேற்படி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைவதுடன், பொது மக்கள் தங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பான முறையில் நிறுத்த ஏதுவாக இருக்கும். மேற்படி திட்டம்  மாநகரப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில்  இருக்கும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

Label