OUR CLIENTS
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு Posted on 19-Nov-2018 வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ.19-

தெற்கு அந்தமானில் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளது. 19, 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள வட, தென் மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் கூறியது: மலாய் தீபகற்பம் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வெள்ளிக்கிழமை காணப்பட்டது. இது தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சியாக நிலவுகிறது. இது வலுவடைந்து, தெற்கு அந்தமானின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வாக உருவாகவுள்ளது.
இதனால், திங்கள் கிழமை, செவ்வாய்க் கிழமைகளில் (நவம்பர் 19, 20) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து மேற்குத் திசையில் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் திங்கள்கிழமை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களில் செவ்வாய்க் கிழமையும், புதன் கிழமையும் (நவம்பர் 20, 21) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று பாலச்சந்திரன் கூறினார்.
தென்கிழக்கு அரபிக்கடலுக்கு ஞாயிற்றுக் கிழமையும், திங்கள் கிழமையும் (நவம்பர் 18, 19), தென்மேற்கு அரபிக்கடலுக்கு திங்கள் கிழமையும், செவ்வாய்க் கிழமையும் (நவம்பர் 19, 20) மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் 7 மாவட்டங்களை வெள்ளிக்கிழமை அதிகாலை சூறையாடிய கஜா புயல் வலுவிழந்து, தமிழக உள் மாவட்டங்கள் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்தது. அதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை அடுத்தடுத்து வலுவிழந்து கேரள பகுதியில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, அரபிக்கடலை சென்றடைந்தது.
இந்நிலையில், அது சனிக்கிழமை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உள்ள லட்சத்தீவுகளை யொட்டிய பகுதியில் மீண்டும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.

Label