OUR CLIENTS
இளவரசி வீட்டில் 90 சவரன் நகை திருட்டு வடமாநிலக் காவலாளி கைவரிசை
இளவரசி வீட்டில் 90 சவரன் நகை திருட்டு வடமாநிலக் காவலாளி கைவரிசை Posted on 19-Nov-2018 இளவரசி வீட்டில்  90 சவரன் நகை திருட்டு வடமாநிலக் காவலாளி கைவரிசை

சென்னை, நவ.19-

சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி. இவரது மகன் விவேக் ஜெயராமன் ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர்களது வீடு நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் ராமநாதன் தெருவில் உள்ளது.

சசிகலா, இளவரசி இருவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ளனர்.
தற்போது விவேக் ஜெயராமன் குடும்பத்துடன் ராமநாதன் தெருவில் வசித்து வருகிறார். கடந்த மாதம் சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த இளவரசி, பரோல் முடிந்து கடந்த  நவம்பர் 8 &ம் தேதி அன்று காலை  பெங்களூரு சிறைக்கு புறப்பட்டுச் சென்றார். அவரது கார் ஓட்டுநர் முரளி (38 ) பெங்களுருக்கு சென்றுவிட்டு அன்றிரவு 11.30 மணிக்கு இளவரசியின் வீட்டிற்கு வந்து மொட்டை மாடியில் தூங்கியுள்ளார்.
மறுநாள் நவம்பர் 9&ம் தேதி காலை 7 மணி அளவில் ஓட்டுநர் முரளி பார்க்கும்போது வீட்டின் முதல் மாடியின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு நெளிக்கப்பட்டு திறந்துள்ளது தெரியவந்தது. வீட்டில் கதவு திறக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டிருப்பது குறித்த தகவலை கிண்டி அலுவலகத்தில் பணியாற்றும் மேலாளர் பிரசன்னாவிடம் முரளி தெரிவித்துள்ளார். பிரசன்னா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட  தகவலை இளவரசியின் மகன் விவேக்கிற்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேலாளர் பிரசன்னா சுமார் 750 கிராம் தங்க நகைகள் திருடு போய் உள்ளதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து திருட்டு சம்பந்தமாக கார் ஓட்டுநர் முரளி மற்றும் மேனேஜர் பிரசன்னா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் நவம்பர் 8&ம் தேதி இளவரசி பரோல் முடிந்து பெங்களூரு சிறைக்குச் சென்ற பின்னர் விவேக்கின் மனைவி மதியம் 3 மணிக்கு அண்ணாநகரில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன்பின் அவர் அங்கேயே தங்கியுள்ளார். விவேக் அன்றைய தினம் தாயுடன் பெங்களூரு சென்று விட்டு  பின்னர் குடும்பத்துடன் வெளியூர் சென்றதாகத் தெரியவருகிறது.
சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3 மணிக்கு விவேக்கின் மனைவி தனது தாய் வீட்டிற்கு செல்லும் போது வாட்ச்மேன் கோனாக் என்பவர் வீட்டில் காவலுக்கு இருந்துள்ளார். அதன்பின் அவரைக் காணவில்லை. இதுவரையில் தலைமறைவாக இருந்து வருகிறார். காவலாளி கோனாக் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போலிச் சாவியை வைத்து கதவைத் திறந்து நகையைத் திருடி இருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள்.
திருட்டு போன நகைகள் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் 750 கிராம் நகைகள் (சுமார் 90 சவரன்) எனத் தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் கைரேகைகள் எதுவும் உள்ளதா? கோனாக்குக்கு உதவியாக வேறு யாரும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைபோன வீட்டில் சிசிடிவி எதுவும் இல்லை என்பதால், வழியில் வேறு எங்கும் சிசிடிவி உள்ளதா? எனவும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வாட்ச்மேன் கோனாக் எப்படி பணிக்கு வந்தார். அவரை யார் சேர்த்துவிட்டது. கோனாக்கின் சொந்த ஊர் உள்ளிட்ட மற்ற விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

Label