OUR CLIENTS
அறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம்!
அறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம்! Posted on 19-Nov-2018 அறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை அரசு அனுமதி மறுப்பால் இடமாற்றம்!

சென்னை, நவ.19-

அறிவாலயத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கருணாநிதி சிலை அமைக்க அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள பட்டா நிலத்தில் சிலைகளை அமைக்க தி.மு.க., தரப்பில் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலய கட்டடத்தில் தி.மு.க., தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அறிவாலயம் முகப்பு பகுதி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட இடம். அந்த இடத்தில் பூங்கா அமைத்து தி.மு.க., பராமரித்து வருகிறது. அந்த இடத்தில் 1989ல் அண்ணாதுரை சிலை அமைக்கப்பட்டது. அதன் அருகில் மறைந்த கருணாநிதிக்கு சிலையை அமைக்க தி.மு.க., முடிவு செய்தது. அதன்படி 8 அடி உயரமுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கலச் சிலை உருவாக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைசேர்ந்த சிற்பி தீனதயாளன், கருணாநிதி சிலையை உருவாக்கியுள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சிலையை பார்வையிட்டு சில மாறுதல்களை செய்யும்படி கூறினார். அதன்படி சிலை முழு வடிவம் பெற்று நிறுவ தயாராக உள்ளது.சிலை அமைக்க திட்டமிட்ட இடம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட இடம் என்பதால் முறைப்படி சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. மாநகராட்சி நிர்வாகமும் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க முடிவு செய்தது.
அனுமதி வழங்க தனி அலுவலர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அனுமதி வழங்க அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.அதன் தொடர்ச்சியாக அனுமதி கோரி மாநகராட்சி நிர்வாகம் அனுப்பிய கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டன. இது தி.மு.க., தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு அனுமதி வழங்காவிட்டால் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிலை வைப்பது கடினம்.
இதை தவிர்க்க அறிவாலயம் முகப்பில் கட்சிக்கு சொந்தமான பட்டா இடம் சிறிய அளவு உள்ளது. அதில் அண்ணாதுரை, கருணாநிதி சிலையை அருகருகே அமைக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. அதற்காக மாநகராட்சி இடத்திலிருந்த அண்ணாதுரை சிலை அகற்றப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க., தலைமை வெளியிட்ட அறிக்கை: கருணாநிதியின் உருவச் சிலையை டிச., 16ல் அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க உள்ளனர்.  ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்திற்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி தந்து தமிழர்களின் உள்ளங்களில் வாழும் தலைவரின் உருவச் சிலை தி.மு.க., சார்பில் அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் நிறுவப்பட உள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணாதுரை சிலையும், கருணாநிதியின் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிச., 16ல் உருவச் சிலை திறப்பு எழுச்சிமிகு விழாவாக நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label