OUR CLIENTS
புயல் சேதங்களுக்கு முழு நிவாரணம்! துணை முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி
புயல் சேதங்களுக்கு முழு நிவாரணம்! துணை முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி Posted on 20-Nov-2018 புயல் சேதங்களுக்கு  முழு நிவாரணம்! துணை முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி

நாகை, நவ.20-

நாகையில் புயல் சீற்றத்தால் பாதிக்கப் பட்டவருக்குப் பேரிடர் நிவாரண உதவிப் பொருள்களை வழங்குகிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடன் அமைச்சர்கள்.
கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு அரசு முழுமையான நிவாரணம் வழங்கும் என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாகையில், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகை, திருவாரூர் உள்பட 6 மாவட்டங்கள் முழுமை யாகவும், 4  மாவட்டங்கள் பகுதியளவிலும் கடுமையான சேதத்துக்குள்ளாகின. இப்பகுதிகளில், அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாலையில் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. பிரதான சாலைகளில் சரிந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. அடுத்து கிராமச் சாலைகளில் மரங்களை அகற்றும் பணிகள் நடைபெறும். குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 26 ஜெனரேட்டர்களைக் கொண்டு குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பழுதடைந்த மின் கம்பங்களைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன.   புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் 216 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 
மின் வாரியப் பணியாளர்கள் 1,200 பேரும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் 1,198 பேரும், பேரூராட்சிப் பணியாளர்கள் 828 பேரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பணியாளர்கள் 1,194 பேரும், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் 955 பேரும் வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக் கப்பட்டு, சீரமைப்புப் பணிகளில் ஈடுப டுத்தப் பட்டுள்ளனர். 
சுனாமி சீற்றத்தின்போது, அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து, ஒத்துழைப்பு அளித்ததைப் போல், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீளவும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உரிய வகையில் வழங்கப்படும். உணவு தயாரிக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும், இந்த முகாம்களில் உணவு வழங்கப்படும். உணவு தயாரிப்புக்கான அடிப்படைத் தேவைகளான அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் ஆகியன தேவைக்கேற்ப வழங்கப்படும் என்றார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். 
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Label