OUR CLIENTS
தருமபுரி பஸ் எரிப்பு வழக்குக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது எப்படி? ஆளுநர் மாளிகை விளக்கம்
தருமபுரி பஸ் எரிப்பு வழக்குக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது எப்படி? ஆளுநர் மாளிகை விளக்கம் Posted on 21-Nov-2018 தருமபுரி பஸ் எரிப்பு வழக்குக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது எப்படி? ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை, நவ.21-

தருமபுரியில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஆளுநர் மாளிகை விடுத்துள்ள விளக்க அறிக்கையில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த 3 பேரும் சட்ட நடைமுறைப்படியே விடுதலை செய்யப்பட்டனர். 3 பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு ஆளுநர் மாளிகைக்குப் பரிந்துரை செய்திருந்தது. அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவின் கீழ், 13 ஆண்டுகள் மூன்று பேரும் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்ய பரிந்துரைக்கப் பட்டிருந்தது.
ஏற்கனவே அனுப்பிய மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது. மீண்டும் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்ததை அடுத்தே ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொலை செய்யும் நோக்கத்தோடு அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று தலைமைச் செயலரும், தலைமை வழக்கறிஞரும் ஆளுநர் மாளிகைக்கு விளக்கம் அளித்ததை ஏற்றுக்கொண்டே விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோர் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) விடுதலை செய்யப்பட்டனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின் அடிப்படையில், ஆளுநர் ஒப்புதலைப் பெற்று இவர்கள் 3 பேரையும் விடுவித்து தமிழக சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் மத்திய சிறையில் இருந்து 15 பெண் கைதிகள் உள்பட 185 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டிருந்தது. இதில், 12 கட்டங்களாக 147 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

Label