OUR CLIENTS
கம்மியம்பேட்டை பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள் அவதி!
கம்மியம்பேட்டை பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள் அவதி! Posted on 21-Nov-2018 கம்மியம்பேட்டை பல்லாங்குழி  சாலையில் வாகன ஓட்டிகள் அவதி!

கடலூர், நவ.21-

 கடலூர் நகரில் புறவழிச்சாலையாக உள்ள கம்மியம்பேட்டை இணைப்பு சாலை தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமான சாலையாக மாறிவிட்டது.
இந்த சாலையை புதுப்பிக்க டெண்டர் விட்டும் இன்னும் பணி தொடங்கப்படவில்லை. கடலூர் நகரில் பாரதி சாலை, நேதாஜி சாலை, கடலூர்& சித்தூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் அண்மையில் புதுப்பிக்கப்பட்டதால் வாகனங்கள் செல்ல முடிகிறது. நகரத்தில் உள்ள மற்ற சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளன.இதற்கு முக்கிய காரணம் நகராட்சி ஆகும்.
சிறந்த சாலையாக இருந்தாலும், புதை சாக்கடை திட்டத்துக்கு இணைப்பு கொடுப்பதாக கூறி சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டுகின்றனர். அவ்வாறு இணைப்பு கொடுக்கப்பட்ட பின் ஒப்பந்ததாரர்கள் வெட்டிய சாலையை சரியாக மூடாமல் மண்ணைப் போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் ஆங்காங்கே தண்ணீர் செல்லும் வாய்க்கால் போன்று பள்ளமாக உள்ளது. இதில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
அதேபோன்று, பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக கனரக வாகனங்கள் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாக திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த சாலை கம்மியம்பேட்டை மேம்பாலத்தில் இணைகிறது. மேம்பாலத்தில் இருந்து செம்மண்டலம் வரையிலான இணைப்பு சாலை அண்மையில் பெய்த மழையால் குண்டும் குழியுமாக உள்ளது.சில இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து பெரிய பள்ளங்களாக மாறியுள்ளன. இந்த பள்ளத்தை மூடுவதற்காக உடைந்த செங்கல்லைப்போட்டு நிரப்புகின்றனர். கற்கள் உடைந்து மாவாக மாறி உலர்ந்து காற்றில் பறந்து புகை மண்டலமாக சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
இந்த சாலையை ஒரு பகுதியை புதுப்பிக்க 65 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மற்றொரு பகுதியை புதுப்பிக்க 75 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சாலை போட மழைக்கு முன்பே டெண்டர் விடப்பட்டுள்ளது.அதேப்போன்று வண்ணாரப்பாளையம் முதல் கே.கே.நகர் வழியாக தேவனாம்பட்டிணம் அரசு கலைக் கல்லூரி வரை சாலை போட டெண்டர் விடப்பட்டுள்ளன. ஆனால் மழையை காரணம் காட்டி இதுவரை சாலை போடவில்லை.
இவ்விரு சாலைகளும் தண்ணீர் தேங்கியதால் பல்லாங்குழி சாலையாக மாறிவிட்டது.பருவமழை முடிந்த பின்னர் சாலை போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Label