OUR CLIENTS
துப்புரவு பணிகளை மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்!
துப்புரவு பணிகளை மேற்கொள்ளாத வேலூர் மாநகராட்சி ஆணையர்! Posted on 23-Nov-2018 துப்புரவு பணிகளை மேற்கொள்ளாத   வேலூர் மாநகராட்சி ஆணையர்!

வேலூர், நவ.23-

துப்பரவு பணிகளை மேற்கொள்ளாமல்  வேலூர் மாநகராட்சி ஆணையர்  மெத்தனபோக்கில் செயல்படுவதாக மாநகர பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
கஜா புயலுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொதுமக்கள் தனித்தீவு போல் நகரில் இருந்து துண்டிக்கப்பட்டு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது கடந்த 2 நாட்களாக வேலூரில் மழை தொடர்ந்து பெய்து வந்த வண்ணமாக உள்ளது. இதனால் ஆங்காங்கே மழைநீர் புக ஆரம்பித்துள்ளது.  அதுமட்டுமல்ல மாநகராட்சியில் குப்பைகள் சரி வர அப்புறப்படுத்துவது இல்லை. நேதாஜி மார்க்கெட் துப்புரவு பணியாளர்கள் பணி செய்யாமல் துர்நாற்றம் வீசி தொற்று நோய்களின் பிறப்பிடமாக மாறியுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வயிற்றுக்கு முழு அளவு சாப்பிட்டு விட்டு மாநகராட்சி பகுதி சாலைகளில் சென்றாலோ இருசக்கர வாகனங்களில் பயணித்தாலோ அந்த நபரின் குடல் அறுந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்று சொல்லலாம். கானாற்றில் சரிவர அடைப்புகளை அப்புறப்படுத்துவதே இல்லை. 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெளிமாநிலத்தைச் சேர்ந்த சிறுமி லாங்கு பஜாரில் மழையின் போது பாதாள சாக்கடையில் அடித்து செல்லப்பட்டு சத்துவாச்சாரி அருகே தென்றல் நகரில் மீட்கப்பட்ட வரலாறு வேலூருக்கு உண்டு. இப்படி மாநகராட்சி அலட்சியமுடன் நடந்து கொண்டதால் இதுபோன்ற உயிர்பலியும் ஏற்பட்டது. இந்த பணி இன்றும் தொடர்ந்து வருகிறது. ஆங்காங்கே பாதாள சாக்கடை மூடிகள் சரிவர மூடப்படாமல் உள்ளது. தனியார் நிறுவனங்கள் பாதாள சாக்கடை நடைமேடையை ஆக்கிரமித்து வாகனம் நிறுத்தும் இடமாக பயன்படுத்தியதால், பாதாள சாக்கடை சிலாப்புகள் உடைந்து சேதமடைந்துள்ளது. அதுமட்டுமின்றி மழைகாலம் என்பதால் பேராபத்தை ஏற்படுத்தும். 
மழைநீருடன் சாக்கடை கழிவுகள் சேர்ந்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் கரிய நிறத்தில் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது. இத்துடன் சாக்கடை கழிவுகள் அப்புறப்படுத்தாமல் சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டது. இப்போது மழை வந்ததும் மீண்டும் அந்த சாக்கடை கழிவுகள் சாக்கடைக்குள் விழுந்து அடைத்து கொண்ட நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இவற்றையெல்லாம் பார்க்க இப்போதுள்ள மாநகராட்சி ஆணையருக்கு நேரமில்லை.  வேலூர் மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர ஆணையர் இல்லாமல் தத்தளித்து வந்தது. சரி புதிதாக வந்த ஆணையராவது சேவை மனப்பான்மையுடன் மாநகராட்சிக்கு பணியாற்றுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு கிடைத்ததோ பெருத்த ஏமாற்றமே. இதற்கு முன்னர் மாநகராட்சி ஆணையர்களாக பணியாற்றிய குமார் 
லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கினார். அதன் பின் வந்த குபேந்திரனும் லஞ்ச புகார் சலசலப்பிற்கு  ஆளானார். அதற்கு அடுத்து வந்த பொறுப்பு ஆணையர் விஜயகுமார் தஞ்சாவூர் தலையாட்டு பொம்மைபோன்று செயல்பட்டார். இப்போது  வந்துள்ள சிவசுப்பிரமணியனும் அதே பாணியை கையாண்டு வருகின்றார். ஆக மொத்தம் இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்தபடி ஆணையர் பணியாற்றுகிறாரே தவிர மாநகரை சுற்றிப் பார்த்ததே இல்லை. எங்கெங்கு என்னென்ன பிரச்னைகள் உள்ளது என்பது கூட ஆணையருக்கு தெரியாது. 
அத்துடன் 4வது மண்டலத்தில் முறையான மண்பரிசோதனையின்றி  தனியார் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை பலமுறை காலச்சக்கரம் நாளிதழும் சுட்டிகாட்டியுள்ளது. இதையே காரணம் காட்டி இம்மண்டலத்திற்கு வரும் அதிகாரிகள் கணிசமான தொகை பெற்றுகொண்டு சென்றுவிடுவிதாக கூறப்படுகிறது. புதியதாக வரும் ஒவ்வொரு ஆணையரையும் சரிகட்டிவிடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காட்பாடி முதல் மண்டலத்திலும் அனுமதியின்றி அடுக்குமாடி கட்டடங்கள் முறைகேடாக கட்டப்படுகின்றன. புதிதாக வீடு கட்டுவோர் வரி செலுத்த மனு கொடுத்தால் அதை கண்டுகொள்வதே இல்லை. இப்படி அலட்சியமாக மாநகராட்சி அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இப்படி பல பிரச்னைகள் குறைபாடுகள் தலைவிரித்து ஆடுகின்றன.
இதையெல்லாம் மூடி மறைக்கவே வெளியில் தெரியாமல்  இருக்கவே அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பு என்ற போர்வையில் ஏதேதோ தகவல்களை யார் யாரோ கூறும் தவறான தகவல்களை கூறிவிட்டு தான் சிறப்பாக பணியாற்றுவதாக வெளியில் காண்பித்து கொள்கிறார் மாநகராட்சி ஆணையர். இவரால் வேலூர் மாநகராட்சியும், மாநகரமும் வளருமா? அல்லது பழைய நிலையிலேயே தொடருமா? என்பதை சொல்லவும் வேண்டுமோ!. இனிவரும் காலங்களில்  வேலூர் மாநகராட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வரா சிவசுப்பிரமணியன் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க  வேண்டும். 

Label