OUR CLIENTS
திண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்!
திண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்! Posted on 23-Nov-2018 திண்டிவனத்தில் தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்!

திண்டிவனம், நவ.23-

 சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பாக சென்று வர சர்வீஸ் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் விரைவு படுத்த வேண்டும்.
திண்டிவனம்-விழுப்புரம் சாலையிலுள்ள ஜக்காம்பேட்டையில் ரூ.19 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்றவளாகம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவின் போதே, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம் தேசியநெடுஞ்சாலை அருகே உள்ளதால் நீதிமன்றம் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஜக்காம்பேட்டை வரை உள்ள சர்வீஸ்ரோட்டை நீதிமன்றம் வரை நீட்டித்து தர வேண்டுமென்று வழக்கறிஞர்கள் சார்பில் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை வரை சர்வீஸ் ரோடு உள்ளது. அதன் பிறகு சர்வீஸ் ரோடு இல்லை. இதனால் திண்டிவனத்திலிருந்து நீதிமன்றத்திற்கு வருபவர்கள் தென்பசார் கிராமம் வரை சென்று யூ டார்ன் அடித்து சுற்றி வர வேண்டியுள்ளது.இதற்கு காலதாமதம் ஆவதால் நீதிமன்றத்திற்கு வாகனங்களில் வருபவர்கள் பலர் சர்வீஸ் ரோடு கட்டாகியுள்ள ஜக்காம்பேட்டையிலிருந்து எதிர்திசையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி கடந்து செல்வதால் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இந்நிலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஜக்காம்பேட்டை வரையில் தற்போதுள்ள சர்வீஸ் ரோட்டை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீதிமன்றம் வரை நீடித்து தரவேண்டும் என திண்டிவனம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் கோரிக்கை வைத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.
இதற்கிடையில் திண்டிவனத்திலிருந்து நீதிமன்றத்திற்கு வருவோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்வதை கண்டித்து கடந்த ஜன.,24ம் தேதி வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வருவாய்த்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் ஜக்காம்பேட்டையிலிருந்து நீதிமன்றம் வரை சர்வீஸ் ரோடு 6 மாதத்திற்குள் அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். அவர்கள் அளித்த காலக்கெடு முடிந்து பல மாதங்கள் ஆகியும் சர்வீஸ் ரோடு அமைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்ட போது,  ஜக்காம்பேட்டை சர்வீஸ் ரோட்டிலிருந்து நீதிமன்றம் வரை தேசிய நெடுஞ்சாலையையொட்டி இடது புறமாக உள்ள இடத்தை கையகப்படுத்தி ரூ.10 கோடி செலவில் சர்வீஸ் ரோடு அமைப்பதற்கான திட்டம் நகாய் மூலம் போடப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றனர். இது இல்லாமல் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் ரூ.4 கோடி செலவில் ஜக்காம்பேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தையொட்டி செல்லும் சாலை மற்றும் ஏரிப்பகுதி வழியாக சென்று நீதிமன்றம் பின்புறம் முடியும் வரை புதிய சாலை அமைப்பதற்கான திட்டமும் மாவட்ட கலெக்டரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கின்றனர்.திண்டிவனம் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறக்கப்பட்டு 18 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் சர்வீஸ் ரோடு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சர்வீஸ் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகாய் அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது.

Label