OUR CLIENTS
அங்கீகாரத்துக்கும், நிதி உதவிக்கும் காத்திருக்கும் பள்ளேரி விவசாயி ராஜா!
அங்கீகாரத்துக்கும், நிதி உதவிக்கும் காத்திருக்கும் பள்ளேரி விவசாயி ராஜா! Posted on 23-Nov-2018 அங்கீகாரத்துக்கும், நிதி உதவிக்கும் காத்திருக்கும் பள்ளேரி விவசாயி ராஜா!

வேலூர், நவ.23-

அங்கீகாரத்துக்கும், நிதி உதவிக்கும் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள் என்கின்றார் பள்ளேரி விவசாயி ராஜா.
விவசாயப் பணிகளுக்கு ஆட்களே வராத இன்றைய சூழலில் குறைந்த வேலை ஆட்களைக் கொண்டு விவசாயப் பணிகளை சுலபமாக்கும் வகையில் புதிய வேளாண் கருவிகளை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விவசாயி, தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் அங்கீகாரத்துக்கும், மானியத்துடன் கூடிய வங்கி நிதி உதவிக்கும் காத்திருக்கிறார்.
இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு காரணங்களால் சாகுபடித் தொழிலைக் கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு விவசாயிகள் செல்கின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மேல்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையில் பள்ளேரி கிராமத்தில் உள்ள விவசாயி ராஜா (51), வேளாண் இயந்திரக் கருவிகளை வடிவமைப்பதிலும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள வேளாண் கருவிகளில் சிறிய மாற்றங்களை செய்தும் விவசாயப் பணிகளை எளிமையான முறையில் செய்து வருகிறார். 
கடந்த 2015-ஆம் ஆண்டு வறட்சியிலும், வற்றாத வெள்ளாமை என்ற தலைப்பில் இவரது கட்டுரை தினமணி நாளிதழியில் வெளியானது. 
இந்தக் கட்டுரையை தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் வெற்றிக் கதைகள் என்ற தலைப்பில் வெளியிட்டு விவசாயி ராஜாவுக்கு பெருமை சேர்த்தது.
அதைத் தொடர்ந்து, எளிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு வேர்க்கடலைச் செடிகளை நிலத்தில் இருந்து பிடுங்கும் கருவி, வேர்க்கடலையை செடிகளில் இருந்து பறிக்கும் இயந்திரம் என பல்வேறு வோளாண் கருவிகளை வடிவமைத்து விவசாயப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். அவற்றை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர், விவசாயிகள் முன்னிலையில் இயக்கிக் காண்பித்து பாராட்டைப் பெற்றார். 
மேலும், எளிய தொழில்நுட்பத்தில் மின்சாரம் இல்லாமல் ஆழ்துளைக் கிணற்றில் நீர் இறைத்து விவசாயம் செய்வது குறித்த ராஜாவின் ஆராய்ச்சிக்கு சிறந்த விவசாயக் கண்டுபிடிப்பாளர் என்ற விருதை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு, விவசாயப் பயன்பாட்டில் உள்ள நேரடி நெல் விதைப்பு கருவியில் சிறிய மாற்றங்கள் செய்து விவசாயிகளின் பாராட்டைப் பெற்றார்.
இதுகுறித்து விவசாயி ராஜா கூறுகையில், இக்கருவியைக் கொண்டு சேற்றிலும், புழுதியிலும் நெல் விதைக்கும் போது பயிர்களுக்கு இடையே சரியான இடைவெளியில் பராமரிக்கப்படுவதால் களையெடுக்கவும், உரமிடவும், பயிர்களுக்கு சீரான விகிதத்தில், காற்றோட்டம், உரச்சத்துகள் கிடைக்க வழிவகை செய்வதுடன், அதிக மகசூல் கிடைக்கவும் உதவுகிறது என்றார்.
பல புதிய வேளாண் கருவிகளை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விவசாயி ராஜாவை அப்பகுதி மக்கள் வில்லேஜ் விவசாய விஞ்ஞானி என அழைக்கின்றனர். 
எளிய முறையில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேளாண் கருவிகளை வடிவமைக்கும் ராஜா, தனது கருவிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் அங்கீகார அனுமதிக்காகவும், அரசு மானியத்துடன் கூடிய வங்கி நிதி உதவிக்காகவும் காத்திருப்பதாக தெரிவித்தார்.

Label