பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா ஷியா மதகல்வி நிலையத்தில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி Posted on 23-Nov-2018
பெஷாவர்:-
பாகிஸ்தான் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் மதக்கல்வி போதிக்கும் குருமடத்தின் நுழைவாயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 25 ஷியா பிரிவு இஸ்லாமியர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஒராக்சாய் மாவட்டத்தில் கலாயா பகுதியில், சிறுபான்மையினரான ஷியா பிரிவினரின் மதக்கல்வி போதிக்கும் குருமடம் உள்ளது. இந்த குருமடம் அமைந்துள்ள ஜூம்மா பஜாரில் குருமடத்தின் நுழைவாயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைப் பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
இன்று காலை கராச்சியில் சீன தூதரகத்தின் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் ஒராக்சாய் மாவட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் கைபர் பக்துங்க்வா போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.
தாக்குதல் குறித்து கூறிய அம்மாகாண முதல்வர் மெக்மூத் கான், ”எங்கள் மாகாணத்தில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை போல” என்று கூறியுள்ளார்.