OUR CLIENTS
காவலரை இடித்துத் தள்ளிய சம்பவம் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
காவலரை இடித்துத் தள்ளிய சம்பவம் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்! Posted on 26-Nov-2018 காவலரை இடித்துத் தள்ளிய சம்பவம் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

சென்னை, நவ.26-

சென்னையில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவலரை இடித்துத் தள்ளி விபத்தை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். 
இது குறித்த விவரம்: தேனாம் பேட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் நிலைய காவலர் தர்மராஜ். அவர் கடந்த 21-ஆம் தேதி பணியில் இருக்கும் போது, காவல்துறை வாக்கி-டாக்கியில் இருந்தே இறந்த தனது தாயாரின் ஈமச்சடங்குக்கு செல்வதற்கு விடுமுறை தருமாறு  பேசினாராம். இதைக் கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அதிகாரிகள், தேனாம் பேட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராக இருக்கும் ரவிச்சந்திரனிடம் தர்மராஜுக்கு விடுமுறை வழங்காதது ஏன் எனக் கேட்டு கண்டித் தனராம். இந்நிலையில் ஆய்வாளர் ரவிச்சந்திரன், தர்மராஜை பிடிப்பதற்காக தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் அருகே உள்ள சிக்னலில் ரோந்து வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்ற தர்மராஜை, ரவிச்சந்திரன் இடித்துத் தள்ளி, அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழச் செய்து பிடித்தார். இந்தக் காட்சி அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதன் பின்னர், தர்மராஜ் பணியில் இருக்கும் போது மதுபோதையில் இருந்ததாக, திருவல்லிக் கேணி கஸ்தூர்பா மகப்பேறு அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெற்றார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த அதிகாரிகள், தர்மராஜை கடந்த வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்தனர்.
 அதேவேளையில் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரன், மோட்டார் சைக்கிளில் செல்லும் காவலர் தர்மராஜை இடித்துத் தள்ளி விபத்தை ஏற்படுத்தும் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் ஆர்.சுதாகர்  உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் ரவிச்சந்திரன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Label