OUR CLIENTS
சிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை!
சிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை! Posted on 26-Nov-2018 சிறுமிக்கு எலும்பு உடையும் பிரச்சனை உரிய சிகிச்சைக்கு ஆட்சியர் பரிந்துரை!

கிருஷ்ணகிரி, நவ.26-

எலும்பு உடையும் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உறுதியளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் பூபதி(38), மனைவி கிரிஜா(32). இவர்களது ஒரே மகள் தீபிகா( 13). தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தீபிகாவுக்கு எலும்பு உடையும் நோய் உள்ளது. இதுவரை எட்டு முறை எலும்பு உடைந்துள்ளது. ஏழு முறை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதுகுறித்து அவரது தாய் கிரிஜா கூறியதாவது: தீபிகாவுக்கு மிகுந்த சந்தோஷத்திலும், அதிக மன வருத்தத்திலும் எலும்பு முறிவு ஏற்படுகிறது. ஆனால் படிப்பதில், எழுதுவதில் முதல் பரிசு பெற்று வருகிறார். இந்த நோயை குணப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்கு படித்து வரும் எனது மகள் நோயின் பிடியில் இருந்து நிரந்தரமாக குணமாக வேண்டும். தீபிகாவுக்கு இந்த பிரச்சனையே தொடர்ந்து அவரது சிந்தனையை, எண்ணத்தை சிதைத்து வருகிறது. மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ எனது மகளுக்கு உதவிபுரிந்து அவரை காப்பாற்றி எங்களுக்கு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார் கூறியதாவது: இந்த நோய்க்கு 'ஆஸ்ட்டியே ஜெனிசிஸ் இம்பெர்பெக்டா' என்று பெயர். கால்சியம் மற்றும் ஹார்மோன் குறைபாட்டாலும், ஜீன்கள் குறைபாட்டாலும் ஏற்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் சிறிய அளவில் கம்பிகளை வைத்து சாதாரண அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.தகுதி வாய்ந்த எலும்பு டாக்டரிடம் மாவு கட்டும் போடலாம். பெண் குழந்தைகளுக்கு 14, 15 வயது பருவத்திற்கு வரும் போதும், ஆண் குழந்தைகளுக்கு 16, 17 வயது வரும்போதும் இந்த பிரச்னை குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார். தீபிகாவுடன் அவரது பெற்றோர், கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரை சந்தித்தனர். முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

Label