OUR CLIENTS
செவ்வாய் கிரகத்தில் இறங்கியது இன்சைட் விண்கலம், முதல் படத்தை அனுப்பியதால் நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம்
செவ்வாய் கிரகத்தில் இறங்கியது இன்சைட் விண்கலம், முதல் படத்தை அனுப்பியதால் நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம் Posted on 27-Nov-2018 செவ்வாய் கிரகத்தில் இறங்கியது இன்சைட் விண்கலம், முதல் படத்தை அனுப்பியதால் நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகவும், பத்திரமாகவும் தரையிறங்கியது. 
சிவப்புக்கோள் என்றும், செங்கோள் எனவும் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியுமா என்று பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதற்காக கடந்த மே மாதம் 5ம் தேதி இன்சைட் என்ற விண்கலத்தை நாசா ஏவியது. சுமார் 50 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்த இன்சைட், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் செவ்வாய் கிரகத்தில் தனது தடத்தைப் பதித்தது. 
இன்சைட் விண்கலம் தரையிறங்கும் போது ஏற்பட்ட புழுதியால் சுமார் 7 நிமிடங்கள் நாசாவில் உள்ள அதன் தொடர்பு மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகப்படியான புழுதியால் விண்கலத்தில் உள்ள லென்ஸ் மறைக்கப்பட்டதால் தரையிறக்குவதில் பெரும் சவால் ஏற்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் புழுதி மண்டலம் அடங்கியதும் இன்சைட் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து தான் முதல் படத்தை எடுத்திருப்பதாகவும், தூசுவினால் படம் தெளிவாக இல்லை என்றும் "எனது புதிய வீட்டில் முதல் தோற்றம்" என்று பொருள்படும் வகையில் தொடர்பு மையத்திற்கு செய்தி அனுப்பியது. இதனையடுத்து நாசா விஞ்ஞானிகள் பெரும் ஆரவாரத்துடன் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டும், கைகளை குலுக்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். 
செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் போன்றவற்றை முதற்கட்டமாக ஆய்வு செய்யும் இன்சைட் விண்கலம், தொடர்ந்து அந்த கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label