OUR CLIENTS
வேலை செய்யாமல் ஆள நினைக்கிறார் சந்திரசேகர ராவ்- பிரதமர் மோடி கடும் தாக்கு
வேலை செய்யாமல் ஆள நினைக்கிறார் சந்திரசேகர ராவ்- பிரதமர் மோடி கடும் தாக்கு Posted on 27-Nov-2018 வேலை செய்யாமல் ஆள நினைக்கிறார் சந்திரசேகர ராவ்- பிரதமர் மோடி கடும் தாக்கு

ஐதராபாத்:- 
  
காங்கிரஸ் கட்சியைப் போன்று வேலை செய்யாமல் மாநிலத்தில் ஆட்சி செய்ய நினைப்பதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைத் தட்டிப்பறிக்க காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்கி உள்ளன. இதேபோல் தெலுங்கானாவில் காலூன்ற பாஜகவும் களமிறங்கி உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நிஜாமாபாத் வந்தார். நிஜாமாபாத்தில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
வளர்ச்சி, புதிய இந்தியாவை கட்டமைத்தல் மற்றும் புதிய தெலுங்கானா மீது நம்பிக்கை உள்ளவர்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். 
காங்கிரஸ் கட்சியைப் போன்று பல ஆண்டுகளாக எந்த பணியையும் செய்யாமல் ஆட்சியை பிடிக்க முடியும் என தெலுங்கானா முதல்வரும், அவரது குடும்பத்தினரும் நினைக்கின்றனர். லண்டனைப் போன்று நிஜாமாபாத் நகரத்தை மாற்றிக் காட்டுவதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், இங்கோ தண்ணீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. 
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான்பாரத் திட்டத்தில் இந்த மாநில முதல்வர் இணையவில்லை. இதன்மூலம் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார். எனவே மக்கள் டிஆர்எஸ் அரசாங்கத்திற்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். 
வாக்கு வங்கி அரசியல் கரையான் போன்று வளர்ச்சியை செல்லரித்துவிட்டது. டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குடும்பத்தினர் ஆளும் கட்சி. இந்த கட்சிகள் இணைந்து தெலுங்கானா தேர்தலில் நட்புறவு போட்டியில் விளையாடுகின்றன. 
இவ்வாறு அவர் பேசினார். 
தெலுங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பிரசார பொதுக்கூட்டம் இதுவாகும். இதேபோல் மெகபூப்நகரில் நடைபெற உள்ள பிரசார கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார்.

Label