OUR CLIENTS
சட்டசபை தேர்தல்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது
சட்டசபை தேர்தல்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது Posted on 28-Nov-2018 சட்டசபை தேர்தல்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 
227 தொகுதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. நக்ஸல்கள் அச்சுறுத்தல் உள்ள பாலகாட் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மத்திய துணை ராணுவப் படையினர், மாநில காவல் துறையினர் உள்பட 1.80 லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மொத்தமுள்ள 65,341 வாக்குச் சாவடிகளில் 17,000 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  
மத்தியப் பிரதேசத்தில் பாஜக 230 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் 229 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியில் மட்டும், கூட்டணிக் கட்சியான சரத் யாதவின் லோக் தந்திரிக் ஜனதா தளம் வேட்பாளர் போட்டியிடுகிறார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 227 தொகுதிகளிலும், அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி 208 தொகுதிகளிலும், அகிலேஷ் யாதவின் சமாஜவாதி 51 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 
மத்தியப் பிரதேசத்தில் கடந்த தேர்தலில் பாஜக 165 தொகுதிகளிலும், காங்கிரஸ் 58 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 4 இடங்களிலும், மூன்று தொகுதிகளில் உதிரிக் கட்சி, சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இந்த முறையும் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. அங்கு காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, மூத்த தலைவர் கமல்நாத், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகியோர் இடையே போட்டி ஏற்படும் என்பதால், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. 
மத்தியப் பிரதேசத்தில் பாஜக கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அங்கு, ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தேர்தல் அதற்கு ஒரு முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.

Label