OUR CLIENTS
உலகக் கோப்பை ஹாக்கி வெற்றியோடு தொடங்கியது இந்தியா
உலகக் கோப்பை ஹாக்கி வெற்றியோடு தொடங்கியது இந்தியா Posted on 29-Nov-2018 உலகக் கோப்பை ஹாக்கி வெற்றியோடு தொடங்கியது இந்தியா

உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் மோதிய இந்திய- தென்னாப்பிரிக்க வீரர்கள்.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வென்று, உற்சாகமாகத் தொடங்கியுள்ளது.
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் 2 கோல்களும், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், லலித் உபாத்யாய் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். அரங்கம் நிறைந்த இந்திய ரசிகர்களால், அணியின் ஒவ்வொரு கோலுக்கும் மைதானம் அதிர்ந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியாவின் அதிரடியால் 10-ஆவது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. தென்னாப்பிரிக்க தரப்பு விதிமீறிய வகையில் பந்தை தடுத்ததால், இந்தியா மேல்முறையீடு செய்ய, முடிவில் முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த முயற்சியில் தென்னாப்பிரிக்க கோல் கீப்பர் பந்தை தடுக்க, களத்துக்கு திரும்பிய பந்தை மீண்டும் கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார் மன்தீப் சிங். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஆகாஷ்தீப் சிங் அருமையான ஃபீல்டு கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னேறியது.
இவ்வாறாக நிறைவடைந்த முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதியிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது. 42-ஆவது நிமிடத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக விடாமல் இந்திய வீரர்கள் தடுத்தனர்.
இந்நிலையில், இந்தியா 43, 45, 46-ஆவது நிமிடங்களில் 3 கோல்கள் அடித்தது. அதில் முதல் கோலை மன்தீப் சிங் உதவியுடன் சிம்ரன்ஜீத் சிங் அடித்தார். அடுத்து லலித் உபாத்யாய் ஒரு கோலடிக்க, கடைசியாக பெனால்டி வாய்ப்பு ஒன்றில் மீண்டும் சிம்ரன்ஜீத் சிங் கோலடித்தார். எஞ்சிய நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு கோல் வாய்ப்பு வழங்காத இந்தியா, இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. சிம்ரன்ஜீத் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கடைசியாக தென்னாப்பிரிக்காவை 2014-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சந்தித்த இந்தியா, 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. 
பெல்ஜியம் வெற்றி
இதனிடையே, முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. பெல்ஜியம் தரப்பில் ஃபெலிக்ஸ் டெனாயர் (3-ஆவது நிமிடம்), தாமஸ் பிரீல்ஸ் (22) கோலடிக்க, கனடா தரப்பில் மார்க் பியர்சன் (48) ஒரு கோலடித்தார்.

இன்றைய ஆட்டம்:-
ஏ பிரிவு
ஆர்ஜென்டீனா-ஸ்பெயின்
நேரம்: மாலை 5 மணி
நியூஸிலாந்து-பிரான்ஸ்
நேரம்: இரவு 7 மணி
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிடி

Label