OUR CLIENTS
தமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்!
தமிழக அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை மனமாற்றம்! Posted on 29-Nov-2018 தமிழக அரசியல்வாதிகளுக்கு  கட்டாயம் தேவை மனமாற்றம்!

சென்னை, நவ.29-

அண்மையில் கேரளம் வெள்ளத்தால் சீரழிந்து உருக்குலைந்து போனபோது, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டன.

ஆனால் இப்போது கஜா புயலால் தமிழகத்தின் எட்டு மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும்போது, எந்த அண்டை மாநிலமும் உதவிக்கு வரவில்லை. சினிமா நடிகர்களில் ஒரு சிலர் மட்டும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தங்கள் பங்காக குறிப்பிட்ட தொகையை அறிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் மாத ஊதியம் பெறுவோரிடம் நிவாரண நிதி கேட்டு கோரிக்கை வைக்கும் ஆளும் கட்சியினர், பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அவர்கள் நிவாரண நிதியைக் கொண்டுவந்து கொட்டுவார்களே. அதேபோல அரசியல்வாதிகளும் தங்களால் முயன்ற அதிகபட்ச நிதியைக் கொடுத்தால்தான் என்ன? தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ரூபாய் ஒரு கோடி தந்திருப்பது பாராட்டத்தக்கது. மற்ற கட்சிகளும் தாமதமின்றி நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும். யார் அதிகம் தருகிறார்கள் என்பதில் போட்டி போடலாமே. ஆனால் அவர்கள் இதற்குத் தயாராக இல்லை.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இயற்கைச் சீற்றத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. நிவாரண உதவிகளை வழங்குவதில் பிரச்னையிருக்காது என்று தோன்றினாலும், கண்டிப்பாக அதிலும் சிறிதாவது பாரபட்சம் இருக்கத்தான் செய்யும். 
அதையும் மீறி சேதங்களை மதிப்பிட்டு உரியவர்களுக்கு நிவாரணம் வழங்குவது என்பது எந்த அரசுக்கும் சவாலானதே. ஏனென்றால் இது பணம், பொருள் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் பிரச்னை வருவது இயல்புதான். ஆனால் சிறிது குறைகள் இருந்தாலும் உரியவர்களுக்கு நிவாரண உதவியைக் கொடுப்பது என்பது மிகப் பெரிய சாதனைதான்.
வர்தா, தானே, ஒக்கி போன்ற புயல் பாதிப்புகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மைதான். ஆனாலும் இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை கஜா புயலுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை அரசு செய்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
பல்வேறு மாவட்டங்களுக்கும் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் களத்தில் இருந்து தேவையான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஆனாலும் இயற்கைச் சீற்றம் மிகக் கடுமையான அளவில் இருக்கும் போது என்னதான் முன்னேற்பாடுகள் இருந்தாலும் அவை பலனளிக்காது என்பது இப்புயலின் மூலம் கிடைத்த பாடம்.
இப்போது அடுத்த பிரச்னை தொடங்கிவிட்டது. முதல்வர் நேரில் சென்று புயல் பாதித்த பகுதிகளைப் பார்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குறைகூறத் தொடங்கிவிட்டன. முதல்வர் சென்று பார்த்தபோது வானிலை சரியில்லாத காரணத்தால் இரு மாவட்டங்களுக்குச்செல்ல முடியவில்லை. உடனே இதையும் அரசியலாக்கத் தொடங்கிவிட்டன.
எந்த அரசியல்வாதிக்கும் பாதிக்கப்பட்ட பொதுமக்களைப் பற்றிக் கவலையில்லை. எப்படி ஆளும் அரசைக் குறை கூறலாம், அதிலிருந்து தங்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் என்ன என்பதைத்தான் யோசிக்கிறார்களே தவிர வேறு எதைப்பற்றியும் யோசிப்பதேயில்லை. அடுத்த தேர்தலில் எப்படி வாக்குகளைப் பெறுவது என்பதுதான் தமிழக அரசியல் கட்சிகளின் பிரச்னையே.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒன்றாகச் சென்று பார்வையிட்டனர். அந்தப் பண்பு இங்கு வரவில்லையே. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தவரின் இல்லத் திருமணத்துக்கே பிரதமர் மோடி சென்று வாழ்த்தி வந்தாரே. பகை நாடாக இருந்தாலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று வாழ்த்தி வந்தாரே நம் பிரதமர் மோடி. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது திமுக&வின் முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்ததும், கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது அஇஅதிமுக&வின் முக்கிய தலைவர்கள் சென்று நலம் விசாரித்ததும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.
இந்தக் கலாசாரம் தொடர வேண்டும் என்றுதான் அனைவருமே விரும்பினார்கள். ஆனால் அரசியல்வாதிகளின் தொடர்பு அப்போதைக்கு மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் அந்தச் செயல்பாடுகள் அடியோடு நின்று போய்விட்டன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அதில் குளிர் காய நினைப்பதைத் தவிர்த்துவிட்டு ஆக்கப் பூர்வமான முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆலோசனை சொல்லலாம். அதைவிட்டு விட்டுக் கடுமையான விமர்சனம் செய்வது தேவையற்றது. முதல்வரும் இந்த விஷயத்தில் சிறிது விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. ஏனெனில் எந்த ஒரு சிறு ஆலோசனையும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க வல்லது. எவரிடமிருந்து வந்தாலும் நல்ல ஆலோசனையை ஏற்பதில் தவறில்லை.
கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பாக இருந்தாலும் தங்கள் மாநிலத்துக்கு பாதகமான தீர்ப்பு வந்தால் (அது நியாயமாக இருந்தாலும்கூட) அனைத்துக் கட்சியினரும் ஒன்று கூடி எதிர்க்கிறார்கள். ஆனால், தேர்தலின்போது எதிரியாக மாறிக் கொள்கிறார்கள். இந்த நிலை தமிழகத்தில் மட்டும் ஏனோ இல்லை. தமிழக அரசியல்வாதிகளிடம் அனைவரையும் அரவணைத்துப்போகும் மனமாற்றம் வந்தால் தமிழகம் நாட்டிலேயே முதல் மாநிலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

Label