OUR CLIENTS
சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்
சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் Posted on 29-Nov-2018 சர்கார் பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

சர்கார் பட விவகாரத்தில் தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்த மனுவில், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு சர்கார் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், படத்தை எதிர்த்து ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது. மேலும், இந்தப் படம் தற்போது நிலவும் பிரச்னைகளை சித்திரித்துதான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தைப் பார்த்த பொதுமக்கள் யாரும் அரசுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடவில்லை. எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இயக்குநர் முருகதாஸை நவம்பர் 27-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. 
இந்நிலையில், சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்காக ஏ.ஆர். முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இனிவரும் காலங்களில் அரசின் கொள்கைகளை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
அரசின் கோரிக்கையை ஏற்க மறுப்பு: இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விவேகானந்தன், சர்கார் திரைப்பட விவகாரத்தில் அரசுத் தரப்பில் கோருவதை போல நிபந்தனையற்ற மன்னிப்பு கோர முடியாது. மேலும், அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளிக்க முடியாது. திரைப்படங்களில் விமர்சிக்க கருத்து சுதந்திரம் உள்ளது என வாதிட்டார். அப்போது, குறுக்கிட்ட மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதுபோல அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். எனவேதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கேட்பதாகத் தெரிவித்தார்.
தடை நீட்டிப்பு: இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் முருகதாஸை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை இரண்டு வார காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது. அவர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து போலீஸார் இரண்டு வார காலத்துக்குள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 13-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

Label