OUR CLIENTS
காட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள்
காட்சிப்பொருளாகிப் போன பொதுக் கிணறுகள் Posted on 30-Nov-2018 காட்சிப்பொருளாகிப்  போன பொதுக் கிணறுகள்

நாமக்கல், நவ.30-

பண்டைக்காலம் முதல் கிராமங்களில் குடிநீர் ஆதாரமாக விளங்கிய பொதுக் கிணறுகள், கடந்த பல ஆண்டு காலமாக காட்சிப் பொருளாக உள்ளன.  இந்தக் கிணறுகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  
தற்காலத்தில் கிராமங்களில்  வீட்டுக்கே குடிநீர் வருகிறது.  ஆனால்,  சுமார் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒவ்வொரு கிராமத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கிணறுகள்தான் கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தன.  கிராம மக்கள் இந்த கிணறுகளை உறை கிணறுகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். கிராமத்தின் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப உறை கிணறுகளின் எண்ணிக்கையும் இருக்கும்.  ஆனால்,  உறை கிணறுகள் இல்லாத கிராமமே இல்லை என்கிற வகையில்தான் அன்றைய சமூக நிலை இருந்தது. 
உறை கிணறுகளில் தண்ணீர் ஊற்று தொடர்ந்து இருக்கும் வகையில்,  சில கிராமங்களில் குடியிருப்புகள் அருகில் உள்ள ஏரி,  குளங்களுக்கான வரத்து வாய்க்கால்கள்,  உபரி நீர் வெளியேறும் வாய்க்கால்கள், காட்டாறுகளின் கரைகளில்  உறை கிணறுகள் அமைக்கப்பட்டன. இந்தக் கிணறுகளில் பெரும்பாலானவை பற்பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. சில கிணறுகள் நூற்றாண்டுப் பழக்கமுள்ளவை. 
இந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீரை வாளிகள் மூலம் இறைத்துப் பயன்படுத்தி வந்தனர் கிராம மக்கள். பிறகு, மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்குக் கொண்டு சென்று குடிநீர் குழாய்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அடுத்த மேம்பாடாக, ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் நடைமுறை தொடங்கிய பிறகு இந்தக் கிணறுகளின் பயன்பாடு படிப்படியாக குறையத் தொடங்கியது.  
ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து கை பம்ப் மூலம் தண்ணீர் எடுக்கும் நடைமுறை தொடங்கும் வரை கூட, இந்த உறை கிணறுகள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, முறையான பராமரிப்பு இல்லாமல்  உறை கிணறுகள் பாழடைந்துள்ளன. இந்தக் கிணறுகளை தூர்வாரி, பயன்பாட்டுக்குக் கொண்டு வர அரசு சிறப்பு நிதி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமங்களில் அந்தக் காலத்தில் பொதுக் கிணறுகள் இருந்தன. மனித உழைப்பு மூலம் கடப்பாரை,  மண் வெட்டியால் பூமியைத் துளையிட்டு, நிலத்தடி நீரை வெளியே எடுப்பதற்கான ஆதிகாலத்தின் விஞ்ஞானம் அது. சதுரம், வட்ட வடிவங்களில் கிணறுகளை அமைத்தனர். உள்புறம் மண் சரிவைத் தடுக்க மணல், சுண்ணாம்பு அல்லது மணல், சிமென்ட் கலவையால் உட்பூச்சு, மேற்பகுதியில் நான்குபுறமும் தடுப்புச் சுவர்,  அதைச் சுற்றிலும் சதுரம் அல்லது வட்ட வடிவிலான மேடை, வடிகால் அமைக்கப்பட்டிருக்கும்.  
பொதுக் கிணறுகளில் நல்ல தண்ணீர் கிணறு, உப்புத் தண்ணீர் கிணறு என இரு வகைக் கிணறுகள் உண்டு. உப்புத் தண்ணீர் கிணற்று நீரை பாத்திரம் துலக்க, துணிகளைச் சலவை செய்ய மற்றும் ஆடு, மாடுகளின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தினர். நல்ல தண்ணீர் கிணற்று நீரை குடிநீர் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தினர்.  
பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக ஊருணிகள் இருந்தன.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும்,  விடுதலைக்குப் பிறகு கடந்த 1970-ஆம் ஆண்டு வரையில் பொதுக் கிணறுகள் அமைக்கப்பட்டன. 
காலப்போக்கில், புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் குடிநீர் திட்டங்கள் வந்தன. மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் நிரப்பி, தெருக்கள்தோறும் குடிநீர் குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் அமைத்தனர்.  
தமிழகத்தில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுக் கிணறுகள் பராமரிப்பின்றி பாழடைந்து குப்பை கொட்டும் இடமாகி உள்ளன.  அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து,  பொதுக் கிணறுகளை ஊர் மக்கள் உதவியுடன் தூர்வாரி, மழைநீர் சேகரிக்கும் கிணறாக மாற்ற வேண்டும்.

Label