OUR CLIENTS
கோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்!
கோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்! Posted on 30-Nov-2018 கோலார் தங்கவயலின் தங்கம் மு.பக்தவச்சலம் காலமானார்!

கோலார் தங்கவயல், நவ.30-

கோலார் தங்க வயல் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.மு.பக்தவச்சலம் [70] மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
1983ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரால் கோலார் தங்க வயல் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட மு.பக்தவச்சலம், அந்த தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடக சட்டப்பேரவையில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது தமிழக  எதிர்கட்சி தலைவராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி உடன் பிறப்புக்கு எழுதும் கடிதத்தில் மு.பக்தவச்சலத்தின் தாய்மொழிப் பற்று குறித்து  பாராட்டி எழுதி இருந்தார். இதனால் தமிழகத்திலும் பக்தவச்சலம் அறியப்பட்டவரானார். மீண்டும் 1989 மற்றும் 1999 ஆகிய வருடங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதிமுக தலைமையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2006ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். இதற்கிடையில் ஆறு முறை கோலார் தங்க வயல் நகரமன்றத் தலைவராகவும், ஒருமுறை துணை தலைவராகவும், தங்கவயல் நகர வளர்ச்சி குழுமத் தலைவராகவும் இருந்த பக்தவச்சலம் கோல்டன் வேலி கல்வி அறக்கட்டளை செயலாளராகவும் இருந்தார்.
பதவி பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பொதுமக்களின் சுக துக்கங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் தலைவராக வலம் வந்த  இவர், 28-.11-.2018 வியாழன் அன்று பகல் ஒரு கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் பேசி விட்டு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக கோலார் எஸ்.என்.ஆர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்தார். கோலார் தங்க வயல் அரசு பொது மருத்துவ மனையில் போதிய மருத்துவர்களும் இல்லை. தகுந்த சிகிச்சையும் இல்லை. அதேபோல் தனியார் மருத்துவனைகளிலும்  இரவு எட்டு மணிக்கு மேல் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை வேறு வழி இல்லாமல், குப்பம் அல்லது கோலார் மருத்துவமனைகளுக்கோ அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பல உயிர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே போய் விடுகிறது.
.தொகுதி எம்.எல்.ஏ. ரூபகலா, கோலார் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.எச்.முனியப்பா, முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஒய்.சம்பங்கி, ராமக்கா,  நகரமன்ற தலைவர் ரமேஷ், முன்னாள் நகர மன்றத் தலைவர் தாஸ் சின்னசவரி உள்பட எராளமான பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தங்கவயல் திமுக சார்பில் "அஞ்சா நெஞ்சம் படைத்த தமிழ்மகன் என்னும் பாசப் பறவை ஒய்வு கொண்டது "என்று இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தனர். பக்தவச்சலம் மறைவை முன்னிட்டு ராபர்ட்சன் பேட்டை, ஆண்டர்சன் பேட்டை ஆகிய முக்கிய வணிக பகுதிகளில் தன்னிச்சையாக  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கோலார் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் கே.சி.முரளி தலைமையில் பக்தவச்சலம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மு.பக்தவச்சலத்தின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக நகரமன்ற மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5மணிக்கு அவரது உடல் அலங்கார ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சாம்பியன் இந்து கல்லரை தோட்டத்தை அடைந்தது. அங்கு அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Label