OUR CLIENTS
காட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்
காட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள் Posted on 04-Dec-2018 காட்பாடியில் முறையான அனுமதியுமின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள்

வேலூர், டிச.4-

வேலூர் மாவட்டம், காட்பாடியில் மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்களை முறைப்படுத்துவது யார்? நடவடிக்கை எடுப்பது யார்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.
வேலூர் சென்னையை அடுத்து வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியாகும். இங்கும் அதேபோன்று பல்வேறு முறைகேடுகள் மாநகராட்சி எல்லைக்குள் நடைபெறுகிறது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி மண்டல அலுவலர், நகரமைப்பு அலுவலர் என யாருமே கண்டும் காணாதது போன்று அமைதியாக இருந்து வருகின்றனர். ஒரு ராட்சத கட்டடம் கட்ட முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படை சட்டத்தை மீறி கட்டடங்கள் அதிவேகமாக எழுப்பப்படுகின்றன. காட்பாடியில் சித்தூர் கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி அனுமதியின்றி பல கட்டடங்கள் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அதை தடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அலுவலர்கள் அவர்களிடமே கையூட்டு வாங்கிக் கொண்டு கண்டும் காணாதது போன்று அமைதியாக செல்கின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இதேபோன்று மண்டல அலுவலர்களை தொடர்பு கொண்டு கேட்டால் அவர்கள் தரப்பில் வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கின்றனர். மௌனம் சம்மதம் என்று அர்த்தம் கொள்ளத் தோன்றுகிறது. மண்டல அலுவலர்கள்தான் இப்படி என்றால் மாநகராட்சி ஆணையர் இவர்களுக்கெல்லாம் மேலாக இருக்கிறார். அவ்வளவுதான், பணிகள் ஏதும் நடைபெறவில்லை. சட்டமன்ற ஆய்வு குழுவினர் பார்த்துவிட்டு மாநகராட்சியின் செயல்பாடுகள் பற்றி கருத்து ஏதும் சொல்லாமல் சென்று விட்டது. மாநகரின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுத்தம் என்பதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமாக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சுகாதாரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் மாநகராட்சியின் செயல்பாடுகள் உள்ளன. 
வேலூர் மாநகரில் குப்பைகள் முற்றிலும் அப்புறப்படுத்துவதே இல்லை என்று அடித்து கூறலாம். குப்பைகள் கடைகள் முன்போ, வீடுகள் முன்போ, காலி மனைகளிலோ கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் பல இடங்களில் துப்புரவு தொழிலாளர்கள் வாரம் ஒரு முறை கூட வந்து குப்பைகளை வாங்கிச் செல்வது இல்லை. சில இடங்களில் ஒன்றுவிட்டு ஒருநாள் வந்து செல்கின்ற நிலை மட்டும் உள்ளது. இப்படி குப்பையில் வேலூர் மாநகராட்சி தனி அரசியல் நடத்தி வருகிறது. குப்பை காகிதம் வைத்து தொழில் நடத்துவோருக்கு குப்பை வரி என்று மண்டலம் 1ல் ரூ.7000 வரி விதித்து வசூலிக்கப்படுகிறது. ஆனால் குப்பைகளை வாங்கிச் செல்ல மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் வருவதே இல்லை என்று அந்தப்பக்கம் ஒரு புலம்பல் இருந்து கொண்டே உள்ளது. இப்படி மாநகராட்சியின் அவலங்களை சொல்லி மாளாது. அந்தளவுக்கு மாநகராட்சியின் செயல்பாடுகள் இருந்து கொண்டுள்ளது. 
மாநகராட்சி முறைமன்ற நடுவத்துக்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது. சாக்கடை கழிவுகளை சாலையின் இருபுறமும் வைத்து விட்டு சென்று விடுவதை துப்புரவு பணியாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். கட்டடங்களுக்கு வரிவிதிப்பதாக சொல்லிக் கொண்டு மாநகராட்சி அலுவலர்கள், வரித்தண்டலர்கள் ஒருபுறம் மெகா வசூல் வேட்டை நடத்துகின்றனர். அதையும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கு ஏற்ப எவ்வளவு வசூல் செய்து கொள்ள முடியுமோ அவ்வளவு வசூல் செய்து கொள்ளும் அவல நிலை வேலூர் மாநகராட்சியில் அரங்கேறி வருகிறது. மாநகராட்சி ஆணையர் மாறினால் மாற்றம் வரும் என்று பார்த்தால் வர வர மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 
"ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" என்று சொல்வது போன்று மாநகரரட்சியில் ஆணையர் மட்டும்தான் மாறினாரே தவிர வேறெந்த பணியும் நடக்கவில்லை, மாற்றமும் ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரவர் குறுநில மன்னர்கள் போன்று வசூல் வேட்டையில் களம் இறங்கியுள்ளனர். புதிதாக 5 மாடி கட்டடம் கட்டுவோர் மண் தர பரிசோதனை கூட செய்து சான்றிதழ் வைத்து கொள்ளவில்லை. தங்கள் விருப்பப்படி கட்டடம் எழுப்புகின்றனர். அதிகாரிகள் காட்டில்தான் மழை பெய்கிறது. இதுபோன்ற அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நோட்டமிட்டு கையும் களவுமாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்படும் பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? சீல் வைக்குமா? இடித்து அப்புறப்படுத்த முன்வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label