OUR CLIENTS
விழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா?
விழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா? Posted on 04-Dec-2018 விழுப்புரத்தில் காவல் துறை ஆசியுடன் நடைபெறும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த எஸ்.பி.முன்வருவாரா?

விழுப்புரம், டிச.4-

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் ஜெயக்குமார். இவர் ஒரு நேர்மையான அதிகாரியாவார்.

இவரது பெயரைச் சொல்லி இவரைச் சுற்றி பணியாற்றும் சக காவல் துறை அதிகாரிகள் 'ப' வைட்டமினை சம்பாதித்து குவிக்கின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விழுப்புரம் மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணையாற்றில் இருந்து மணலை சுரண்டி எடுத்து விற்பனை செய்து கொழுத்து வருகிறது பல மணல் மாஃபியாக்கள். காவல் துறையில் மனசாட்சியுடன் பணியாற்றும் சிலர் மட்டுமே மணல் திருட்டை தடுக்க முழு முனைப்புடன் பணியாற்றுகின்றனர். ஆனால் அதே காவல் துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் தன்னை தனிப்பிரிவு தலைமை காவலர் என்றும், தனிப்பிரிவு சிஐடி டிடாச்மென்ட் என்று அதாவது சிஐடி என்று சொல்லிக் கொண்டு வசூல் வேட்டை நடத்துகின்றனர்.
குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் மாதம் ஒரு முறை க்ரைம் மீட்டிங்குக்கு வரும்போது ஒரு தொகையை கப்பம் செலுத்தி வருகின்றனர். இது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது அவருக்கே வெளிச்சம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐயா சொன்னார் என்று வசூல் வேட்டை நடத்துகின்றனர். நேர்மையான அதிகாரியின் பெயரை கெடுப்பவர்கள் இதுபோன்ற அடிப்பொடிகள்தான். நேர்மையான, காவல் துறை என்றால் என்ன, அதன் பொருள் என்ன என்று தெரிந்து கொண்டு பணியாற்றும் அதிகாரிகளால்தான் இன்றும் காவல் துறை கம்பீரமாகவும், நிமிர்ந்தும் நடைபோடுகிறது. இதுபோன்ற அதிகாரிகள் அதிகரித்து விட்டால் காவல் துறையை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. கட்டப்பஞ்சாயத்து சத்தம்போடாமல் நடக்கிறது. புகாரில் சிக்குபவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்படி நேர்மையான அதிகாரியின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி வரும் கருப்பு ஆடுகளை இனம் கண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுப்பாரா?. 
கூட்டம் முடிந்து வெளியில் செல்லும் டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களில் பலர் அவர் கிடக்கிறார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வாயிலில் பேசிக் கொள்வதையும், கேண்டீனில் பேசிக் கொள்வதையும் காதால் கேட்க முடியவில்லை. இதுதான் நேர்மையான அதிகாரிக்கு சக காவல் துறையினரால் கிடைக்கப்பெற்ற பாராட்டு பத்திரம். குறிப்பாக தனிப்பிரிவு காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனியாக கவனம் செலுத்த வேண்டும். பல தகவல்களை எஸ்பிக்கு தெரிவிக்காமலேயே அவர்களே கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்து கொள்கின்றனர். விழுப்புரம் பகுதியில் பிடாகம், மரகதபுரம், கரடிப்பாக்கம், திருப்பாச்சனூர், பில்லூர் பகுதிகளில் நடைபெறும் மணல் திருட்டுக்கு அளவே இல்லை. விழுப்புரம் தாலுகா போலீசார், விழுப்புரம் நகர போலீசார், விழுப்புரம் மேற்கு போலீசார் சரிசமீமாக தங்களது பங்குகளை பகிர்ந்து கொள்கின்றனர். போக்குவரத்து பிரிவு போலீசார் மணல் கடத்தலை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். பெரிய இடத்து பொல்லாப்பு வேண்டாம் என்று கழற்றி கொள்கின்றனர். விழுப்புரம் தாலுகா காவல் சரக எல்லையில்தான் அதிகளவில் குட்டி யானை எனப்படும் டாடா ஏஸ் வாகனத்தில் ஒரு யூனிட் மணல் கடத்தப்பட்டு அது ரூ.7 ஆயிரம் முதல் அதிகபட்டசம் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 
பல நூதன முறையில் மணல் கொள்ளை நடக்கிறது. திருவெண்ணைநல்லூர் உதவி ஆய்வாளர் ஒருவர் ஹ என்ற எழுத்தில் தொடக்கமாக கொண்டவர், அவர் ஏற்கனவே பல ஆண்டுகள் தனிப்பிரிவில் பணியாற்றி கொட்டை போட்டவர். அவர் சில போலி செய்தியாளர்களுடன் கைகோர்த்து கொண்டு மணல் மாஃபியாக்களுடன் புகுந்து விளையாடுகிறார். தன்னை சிங்கம் படத்தில் வரும் சூரியா போன்று நினைத்து கொண்டு செயல்படுகிறார். இவரைப் போன்று விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் மருது என்ற எஸ்.ஐ.,யும் செயல்படுகிறார். இதுபோன்றவர்களை வேறு மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்ய காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். அது ஏன் என்பது மட்டும் சிதம்பர ரகசியமாகவே உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்துக்கு அவப்பெயர் வந்து சேர்ந்துள்ளது. கடலூர் மாவட்டமும், விழுப்புரம் மாவட்டமும் சிறந்து விளங்குகிறது. ஆனால் விழுப்புரம் மாவட்டம், சில கருங்காலிகளால் இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது.  சிறப்பான செயல்பாட்டினால் முதலிடம் பெற்ற விழுப்புரம் மாவட்ட காவல் துறை நிர்வாகம் சரிந்துள்ளது. விழுப்புரம் அமைச்சு பணியாளர்களோ மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களிடமே எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்டு கறக்கின்றனர். ஃபிளாஸ்க் வாங்கி வா, அயர்ன் பாக்ஸ் வாங்கி வா, டிவி வாங்கி வா என்று தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொண்டுதான் பணியை முடித்து தருகின்றனர். லோன் வாங்க கூட லஞ்சம் தர வேண்டிய பரிதாப நிலை மாவட்ட காவல் அலுவலகத்தில் நிலவுகிறது. இப்படி எஸ்பியை சுற்றி பல முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது. காவல் துறையில் களையெடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சாட்டையை வேகமாக சுழற்றுவாரா? விழிப்புடன் செயல்படுவாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label