OUR CLIENTS
18 நாட்களாக சுடுகாட்டில் தங்கியுள்ள பொது மக்கள் அரசு நிவாரண முகாம் இல்லாததால் சோகம்!
18 நாட்களாக சுடுகாட்டில் தங்கியுள்ள பொது மக்கள் அரசு நிவாரண முகாம் இல்லாததால் சோகம்! Posted on 04-Dec-2018 18 நாட்களாக சுடுகாட்டில் தங்கியுள்ள பொது மக்கள் அரசு நிவாரண முகாம் இல்லாததால் சோகம்!

தஞ்சாவூர், டிச.4-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள ஒரு கிராம மக்கள் முறையான அரசு முகாம் இல்லாதத்கால் கடந்த 18 நாட்களாக அருகில் உள்ள சுடுகாட்டில் தஞ்சமடைந்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கஜா புயல் டெல்டா மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை கடுமையாக தாக்கியதில் வீடு உடமைகள், தென்னை மரங்கள், வாழைத்தோப்புகள் அனைத்தையும் இழந்தனர். லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்ததில் மூன்று மாவட்டங்களில் குக்கிராமங்களில் மின்சாரம் கடுமையாக துண்டிக்கப்பட்டது.
இதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத சேதத்தை உருவாக்கிய புயலால் தாங்கள் 30 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கிய பகுதிகளில் அரசின் நிவாரண பணிகள்  முறையாக சென்று சேரவில்லை என்கிற விமர்சனம் இன்றுவரை உள்ளது.
தனியார் அமைப்பினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என பலரது நிவாரண பணிகள் இல்லையென்றால் உயிர்பலி இன்னும் அதிகமாகியிருக்கும். வீடுகளை இழந்த மக்கள், மின்சாரம் இன்றி, குடிநீர் இன்றி இருள் சூழ்ந்த கிராமங்களில் இன்றும் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு தீவிரமாக நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அது அனைவரையும் சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சாதரணமாக புயல்பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாமில் அரசு அதிகாரிகள் தங்க வைப்பார்கள். ஆனால் பல குக்கிராமங்களில் இன்னும் அரசு அதிகாரிகள் போகவே இல்லை என்ற விமர்சனம் உள்ளது. 
திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பின்னத்தூர் ஊராட்சி தெற்கு ஜீவா தெருவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கஜா புயலால் வீடுகளை முற்றிலும் இழந்தனர். இவ்வாறு  பாதிக்கப்பட்ட 36 குடும்பத்தினருக்கு நிவாரண முகாமோ, முறையான தங்குமிடமோ ஏற்படுத்தி தர அரசு அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வீடு இல்லாத அவர்கள் வேறு வழியில்லாமல் அருகில் உள்ள சுடுகாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். 
தொடர்ந்து பெய்யும் மழை, கடும் குளிர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பிரதான சாலையில் உள்ள சுடுகாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு  வருகின்றனர். இவர்களை அதிகாரிகள் சென்று பார்த்து எங்காவது அருகில் சமூக நலக்கூடத்தில் தங்க வைக்க வேண்டும் என்பதே அவர்கள் எதிர்ப்பார்ப்பு.

Label