OUR CLIENTS
புற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்
புற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள் Posted on 05-Dec-2018 புற்றீசல்கள் போல் பெருகிவரும் போலி பத்திரிகையாளர் சங்கங்கள்

சென்னை, டிச.5-

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்ற வார்த்தை பொய்யாகி வருவது மிகவும் கவலைக்குரியது. காரணம் தமிழால்  வளர்ந்த தமிழ் பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளுக்கு மத்தியில் களையாய் தலைதூக்கி தழைத்தோங்கி உண்மையான பத்திரிகையாளர்களை மறைத்து இன்று போலிகள் பெருகிவிட்டன. இதனால் சமூகத்தில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் உண்மையை உறுதிபட உரைக்கும் பத்திரிகைகளுக்கும் இன்று போதாத காலம் என்றே சொல்லலாம்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைதுறையை, தவறாகப் பயன்படுத்தும் செயல்கள் அரங்கேறிவருகிறது.  இன்று வளர்ந்துவரும் சமுதாயத்தில் உழைக்காமல் சம்பாதிப்பதில் பத்திரிகைத்துறை சுலபமாக உள்ளது என்றும், சில பல சமூக விரோதச் செயல்களை செய்பவர்களை அவர்கள் தொடர்புடைய செய்திகளை வெளி வராமல் இருப்பதற்கும் வசூல் செய்யவும், தங்களது செய்திகளை மறைக்க செலவு செய்ய மறுத்து  சற்று வசதியுடையவர்கள்   தாங்களே ஒரு பத்திரிக்கை டைட்டிலை வாங்கி பத்திரிக்கை நடத்துகின்றனர். இது ஒரு பக்கம் நடந்தால் மறுபக்கம் தமிழகத்தில்  இது சங்கம் ஆரம்பிக்கும்  சீசன் என்றே சொல்லலாம். திரும்பிய  பக்கமெல்லாம்   பத்திரிகையாளர்கள் சங்கம். ஆளுக்கொரு சங்கம் அதற்கொரு தலைவர் என களைகட்டுகிறது.
 நான்கு நல்லவர்கள் கூடி ஒரு சங்கம், அதற்கொரு நிகழ்ச்சி நடத்தி அவார்டு வழங்கிக் கொள்வது தற்போதைய ஃபேஷனாக உள்ளது. இதனால்  பல சட்ட விரோதச் செயல்களுக்கு வழி வகுக்கிறது. சங்கத்தின் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு பல கட்டப்பஞ்சாயத்துக்களை களம் காண கூட்டமாக பலர் கிளம்புகிறார்கள். பத்திரிகையாளர்களை அடையாளப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பில் உள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலும் தங்களுக்கென ஒரு கூட்டத்தை வைத்துக்கொள்வதால் போலிகளையும் கண்டுகொள்ளாமல் விடுவதாலேயே அவர்கள் மாவட்டத்தில் பல முக்கிய அலுவலகங்களில் புகுந்து தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்து அதை பணம், பொருளாக ஈட்டுகின்றனர்.
பத்திரிகையாளர்கள் அல்லாமல் பிற தொழில் செய்ப்பவர்கள் பிரஸ் என்கிற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு செல்வத்தையும் பி.ஆர்.ஓ., இனம்கண்டு காவல்துறையினரிடம் புகார் கூறலாம். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக ஏதும் நாம் கேள்விப்படவில்லை. எனவே குளிர் விட்டுப்போன திருட்டுப்பூனைகள் தங்களை பலப்படுத்திக்கொள்ள சங்கங்களை ஆரம்பித்துக்கொள்கின்றன. அதில் இணைபவர்களை குறித்து சொல்லவே வேண்டாம். அப்படி ஆரம்பிக்கப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டதை மறக்க முடியுமா? தமிழகமும் மறக்காது.  பத்திரிகையாளர்களும் மறக்க மாட்டார்கள் காரணம் அந்த பிறந்த நாள் கொண்டாட்டம்  ரவுடி பினு என்பவருக்கானது. அந்த கொண்டாட்டத்தில் "கைதான 76 ரவுடிகளிடம் 13 பேரிடம் பத்திரிகையாளர் போலி அடையாள அட்டைகள் மற்றும் தலைமை.... என்ற பெயரில் சங்கத்தின் அடையாள அட்டைகள்". இந்நிகழ்வு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 
உயிரை பணம் வைத்து சேவையாக பணியாற்றும் நிஜ பத்திரிகையாளர்கள் மத்தியில் போலிகள் அதிவேகமாக வளர்ந்து  நிஜ பத்திரிகையாளர்களை நசுக்குகின்றன. பத்திரிகையாளர்களாக அல்லாதவர்கள் பதிவுத்துறையில் சங்கங்கள்  என்று பெயரை பதிவு செய்து கொண்டு  அரசு பதிவு எண் என்று சங்கத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். பதிவுத்துறையில் பதியப்படும் சங்கங்கள் முறையாக தொழிற்சங்க சட்டம் 1926ன் கீழ் இயங்காதவை. இதனால் இதில் போலி நிருபர்களும் சங்கங்களை ஆரம்பித்துகொள்கின்றனர். 
போலிகள் தான் தங்களை இப்படி மோசமாக வளர்த்துக்கொள்கின்றனர் என்றால் தன்னை முதல் சங்கத்தின் வாரிசு என கூறிக்கொள்ளும் தலைவர் பாலியல் புகாரில் முக்குளித்துக் கொண்டுள்ளார். மீதமுள்ள நேரத்தில் அரசிடமும் அரசியல்வாதிகளிடமும் சமூகத்தின் முக்கியஸ்தர்களிடம் தன்னை ஒரு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக காட்டி படமெடுத்துக்கொண்டு வாட்ஸ் அப்பிலும்,  முகநூலிலும் அந்த பத்திரிகையாளர் சங்கத்தை நடத்துகிறார். உண்மையில் அவர் அந்த சங்கத்தை நடத்தவில்லை, அதன் நிர்வாகியாக அரசிடம் இன்றைய நாள் வரை அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து பத்திரிகையாளர்களுக்காக பல நற்செயல்களை செய்பவரிடம் தான் சங்கத்தின் அனைத்து உரிமையும் உள்ளது என்பது உண்மை.  இதுவரை எந்த பத்திரிகையாளர்கள் சங்கமும் பத்திரிகையாளர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக குரல் கொடுத்ததில்லை. வேலையில் இருந்து ஒரு செய்தியாளரை பணிநீக்கம் செய்தால் கூட இதுவரை எந்த சங்கமும் போராடியதாக வரலாறு இல்லை. முதலில் சங்கம் என்பது  பத்திரிகையாளர்களுக்கான ஒற்றுமையை பறைசாற்றும் ஒரு அமைப்பு என்ற அடிப்படை தேவையை மறந்து தங்களது சுயலாபத்துக்காகவும், தங்களது  பாதுகாப்பை வலுப்படுத்தவுமே ஒரு சில தனி நபர்கள் உருவாக்கிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறது. போலி பத்திரிகையாளர்களை அடையாளம் காண்பிக்க வேண்டிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களோ நமக்கென்ன என்று ஒதுங்கி கொள்கின்றனர். இன்று தமிழ்நாட்டில் பத்திரிகை, ஊடகங்களின் எண்ணிக்கைகளைவிட பத்திரிகை, ஊடகவியலார்களின் சங்கங்கள் அதிக எண்ணிக்கையில் லெட்டர் பேடு கட்சிகள் போல வீதிக்கு ஒன்று ஊருக்குப் பலதாய் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மாநாடு என்ற பெயரில் நடத்திய வசூல் வேட்டையில் சிலர் கைதும் செய்யப்பட்டார்கள். இதேபோல பல சங்கங்கள் தெருவுக்குத் தெரு உள்ளன. இச்சங்கங்களில் உறுப்பினர் ஆவதற்கும், அடையாள அட்டை பெறுவதற்கும் ஆயிரக்கணக்கில் பணம் பெறப்பட்டு அடையாள அட்டைகள் தரப்படுகின்றன. சிறுபத்திரிகைகள் வைத்திருப்பவர்களும் அவர்களின் நண்பர்கள் சிலர் கேட்பதால் அடையாள அட்டை போட்டுத்தருவதும் நடைபெறுகிறது.
2008 ம் ஆண்டுக்கு முன் பத்திரிகை, ஊடகங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. எளிதில் யார் போலி, யார் உண்மை என்று கண்டறியமுடியும். அதன்பிறகு தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை, சிறு பத்திரிகைகளின் எண்ணிக்கை, இணைய தளங்கள், யூ டியூப் சேனல்களின் எண்ணிக்கை, கேபிள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை ஆகியவை அளவுகடந்து அதிகரித்து விட்ட நிலையிலும் இவற்றைவிட சங்கங்கள் பெருமளவில் பெருகிவிட்டதாலும் பத்திரிகை, ஊடகப் பெயர்கள் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தும் சூழல் இயல்பாகவே அமைந்துவிட்டது. 
இதில் மிகவும் பரிதாபகரமான நிலை என்னவெனில் பல நேரங்களில் போலி பத்திரிகை, ஊடகவியலாளர்கள் காவல்துறையினர், அரசு அலுவலங்களில் தங்கள் அடையாள அட்டைகளைக் காண்பித்து பல காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். பணம் சம்பாதிக்கிறார்கள். இதன்காரணமாக உண்மையான செய்தியாளர்களின் பெயர் இவர்களால் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. பெரும்பான்மையான நேரங்களில் உண்மையான பத்திரிகை, ஊடகவியலாளர்கள் மீது விழும் சந்தேகப்பார்வை போலிகள் மீது விழுவதில்லை. ஏதோ சிறு சிறு சலுகைகளுக்காக பத்திரிகை அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய நிலை மாறி, கேக்கைக்கூட அரிவாளால், கத்தியால் வெட்டும் ரவுடிகளும் பத்திரிகை அடையாளத்தோடு வலம் வருவது மிக மிக அபாயகரமானது. நாட்டின் அழிவுப்பாதைக்கு வழிகோலும் எச்சரிக்கை மணியாகவே பார்க்கவேண்டும்.
இதைவிட சுவாரஸ்யமான அவலம் என்னவெனில், உண்மையான, நேர்மையான பத்திரிகையாளர்கள் தவிர்க்க முடியாத ஒரு சூழலில் ஒரு சிறு சிபாரிசுக்குச் சென்றால் சிபாரிசு செய்யத் தயங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் போலிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். உண்மை பத்திரிகையாளர்கள் தங்களது உழைப்பையும், தொழிலையும் மதித்து தவறாக நடப்பதில்லை. ஆனால் இதை போலி நிருபர்கள் பத்திரிகையாளர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதும் போன்றும் ஜனநாயகத்தின் குரல் வளை நசுக்குவது போன்று நடந்துகொள்கின்றனர். இது நம் நாட்டை அவமதிக்கும் செயலாகும். 
இதுஒருபுறம் இருக்க பத்திரிகையாளர்கள் போர்வையில் பலர் உலா வருகின்றனர். பிரஸ் என்ற ஸ்டிக்கரை காய் விற்பவர், சுண்டல் விற்பவர்கள், முகவர்கள் என யார்வேண்டுமானலும் வண்ண வண்ண நிறங்களில் ஒட்டிக் கொண்டு வலம் வருகின்றனர். இவர்களை காவல் துறையினர் பிடித்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் காவலர்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு பிரஸ் என்று சொல்லி விட்டு எளிதில் இதுபோன்ற போலிகள் தப்பி விடுகின்றனர். இவர்களை அடையாளம் கண்டு ஒழித்தாலே நாடு செழிக்கும். பத்திரிகை என்பது இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண். இதில் முறையாக பத்திரிகையாளர்கள் மட்டுமே பிரஸ் என்ற ஸ்டிக்கரை பயன்படுத்த தகுதியானவர்கள் ஆவர். இதை தொடர்பில்லாதவர்கள் ஒட்டிக் கொண்டு நகரில் வலம் வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். அப்படி பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை காவல் துறை தணிக்கை செய்ய வேண்டும். அடையாள அட்டை (செய்தியாளர், புகைப்பட கலைஞர், உதவி ஆசிரியர்) இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் சம்பந்தபட்ட பத்திரிகை நிறுவனத்தை தொடர்புகொண்டு உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும். 
இதை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறை நடைமுறைப்படுத்த காவல் துறைத்தலைவர் கடுமையாக உத்தரவிட வேண்டும். அப்போதுதான் போலி பத்திரிகையாளர்கள் ஒழிக்கப்படுவார்கள். இதுஒருபுறம் இருக்க புற்றீசல்கள் போல பதிவாளர் அலுவலகத்தில் சங்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தொழிலாளர் நல அலுவலகத்தில் தொழிற்சங்க சட்டம் 1926ன் கீழ் (ஹிஸீபீமீக்ஷீ ஜிக்ஷீணீபீமீ ஹிஸீவீஷீஸீ கிநீ௴) எந்த பத்திரிகை சங்கங்களும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அதுமட்டுமின்றி தொழிற்சங்கச் சட்டம் 1926ன் கீழ் பதிவு செய்யபட்ட ஒரு சில சங்கங்களும் வங்கி கணக்கும், வருடாந்திர கணக்கு தாக்கல் செய்யாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சங்ககங்களை தவறாகச் செயல்படுத்தி வருகின்றனர். தொழிற்சங்க சட்டம் 1926க்கு மாறாக செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமாகவும், தவறாகவும் செயல்படும் சங்கங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். 
அரசும் இந்த இழிசெயலை கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன் என தெரியவில்லை. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் பத்திரிகை துறையில் எந்த சிறு தவறும் நடக்காத வகையில் தடுக்கப்பட வேண்டும். சங்கம் என்ற பெயரில் வசூல் வேட்டை ஒரு புறம் நடந்து கொண்டுள்ளது. இதெல்லாம் ஆரோக்கியமானமதாக இல்லை என்றே சொல்லலாம். நிலைமை இப்படி இருப்பதால்தான் நலவாரியம் பத்திரிகைகளுக்கென இதுநாள் வரை ஆரம்பிக்காமலேயே அரசுகள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. செய்தித்துறையும் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆண்ட போதிலும் பத்திரிகையாளர்களை இதுநாள் வரை கண்டுகொள்ளவே இல்லை. இதற்கு முடிவு ஏற்படுமா? என்பதே பல உண்மையான பத்திரிகையாளர்களின் ஏக்கமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. விரைவில் செய்தித்துறை இதற்கு ஒரு விடிவை கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆதலால் இனிவரும் காலங்களில் காலத்தே செயல்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகளை, வழிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மூத்த பத்திரிகையாளர்கள், ஊடகவியாளர்கள் முன்னெடுக்கவேண்டும். இல்லையெனில் இதன் விளைவுகள் மிக மோசமானதாகவே இருக்கும். அதன் பாதிப்புகள் உண்மையானவர்களுக்கே இடையூறாக இருக்கும். தமிழக செய்தித்துறையும், தமிழக காவல் துறையும் போலிகளின் நடமாட்டத்தை ஒழிக்க கைகோர்க்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும். தமிழக முதல்வர் செய்தித்துறைக்கு தனி நல வாரியம் அமைக்க வழிவகை செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label