OUR CLIENTS
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது!
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது! Posted on 06-Dec-2018 கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது!

வேலூர், டிச.6-

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மட்டுமே போதாது. அவர்களுக்கு தங்குவதற்கு வசதி வாய்ப்புகளை பெருக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
"புயலுக்குப் பின்னே அமைதி' என்று கூறுவார்கள். ஆனால், "கஜா' புயல் அடித்து ஓய்ந்து 10 நாள்கள் கடந்த பின்னும்கூட, இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. போதாக்குறைக்கு அவ்வப்போது மழையும் பெய்து கொண்டிருப்பதால் நிவாரணப் பணிகளையும் முழு மூச்சில் நடத்த முடியாத சூழல்தான் காணப்படுகிறது. இப்படியொரு பேரழிவு, இதற்கு முன்னால் தமிழகத்தைத் தாக்கிய தானே, ஒக்கி, வர்தா புயல்களின்போதுகூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக, மத்திய குழுவினர் தமிழகம் வந்திருக்கிறார்கள். கடந்த நவம்பர் 16-ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அவர்கள் நேரில் சென்று புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இன்னொருபுறம், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி, அவ்வப்போது பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து வருகிறது. 
கடந்த 2004 டிசம்பர் 26-ஆம் தேதி தமிழகத்தைத் தாக்கிய ஆழிப்பேரலையின்போதுகூட இப்போதைய கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளவில்லை. பல லட்சம் மதிப்புள்ள படகுகள் உடைந்து சிதறியிருக்கின்றன. பல லட்சம் மதிப்புள்ள வலைகள் கிழிந்துபோய் காணப்படுகின்றன. பல படகுகளில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. என்னதான் இழப்பீடு வழங்கப்பட்டாலும்கூட, நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பல வருடங்கள் ஆகும். குடிசை உள்ளிட்ட அவர்களது அனைத்து உடைமைகளையும் கஜா புயல் கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான தொழில் உப்பு உற்பத்தி. கடந்த அக்டோபர் மாதமே உப்பு உற்பத்தி முடிந்து குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்தான் கஜா புயல் நாகை, திருவாரூர் மாவட்டங்களைத் தாக்கியது. ஒருசில மணி நேரங்களில் மலை போல் உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த உப்பு, புயல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டதால் 40 நாள் உழைப்பும் சில நொடிகளில் வீணானது. ஏற்றுமதிக்குத் தயாராக, ஏறத்தாழ 4,000 ஹெக்டேர் பரப்பில் வைத்திருந்த உப்பு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. 
2,000 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள மாமரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலான உழைப்பு சில மணி நேரங்களில் வீணானது. இந்த இழப்பின் தாக்கம், குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதுதான் மிகப்பெரிய சோகம். மாமரங்கள் மட்டுமல்ல, எல்லா தரப்பு விவசாயிகளும் ஒட்டுமொத்தமாகத் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டிருக்கும் நிலைமை காணப்படுகிறது. மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருப்பது தென்னை மரங்கள்தான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
வேதாரண்யத்தில் தொடங்கி, பேராவூரணி வரையிலான பகுதிதான் இந்தியாவின் தலைசிறந்த தேங்காய் களஞ்சியம் என்று கூற வேண்டும். இந்தியாவின் மொத்தத் தேவையில் குறைந்தது 30% முதல் 40% தேங்காய் இந்தப் பகுதியில்தான் உற்பத்தியாகிறது. வேதாரண்யம், கருப்பம்புலம், தொண்டியக்காடு, இடும்பவனம், தில்லை விளாகம், ஜாம்பவானோடை, முத்துப்பேட்டை, செம்படவங்காடு, தம்பிக்கோட்டை, மரவக்காடு, அதிராமப்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்த அத்தனை தென்னை மரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பாதிப்பு என்று கருத வேண்டும்.  நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் குறைந்தது ஐந்தாறு தென்னை மரங்கள் காணப்படும். ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ள தென்னந்தோப்பு வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றால், நூற்றுக்கணக்கில் தென்னை மரம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்க அளவில்தான் காணப்படும். மற்றவர்கள் எல்லாம் நூற்றுக்கும் குறைவான, சொல்லப்போனால், 20-க்கும் குறைவான தென்னை மரங்களை வைத்திருப்பவர்கள். அதனால், பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரமே தென்னையிலிருந்து கிடைக்கும் வருவாய்தான். இப்போது அந்த வருவாயை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள் பலரும். 
நிவாரணம் என்ற பெயரில் அரசு இழப்பீடு வழங்குவது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக மீட்டுக் கொடுத்துவிடாது. அதனால், ஒவ்வொரு குடும்பத்தினரும் இழந்திருக்கும் தென்னை மரங்களுக்கு ஈடாக இரண்டு ஆண்டுகளில் பலன் தரும் "ஹைப்ரிட்' தென்னங்கன்றுகளை அவர்களுக்கு வழங்குவதும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு தொகையை வழங்குவதும்தான் புத்திசாலித்தனமான, திட்டமிட்ட நிவாரணமாக இருக்கும். பள்ளிக் கட்டணங்களை செலுத்தும் நிலையில் பெற்றோர் இல்லாததால் குழந்தைகளின் படிப்பு தடை படக்கூடும். அத்தனை வணிகர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பணப்புழக்கம் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்தெல்லாம் மீண்டு சகஜ வாழ்க்கைக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் திரும்பப் போவது எப்போது என்று புரியவில்லை.  உடனடி நிவாரணம் அத்தியாவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மறுவாழ்வு பெற்று, பாதிக்கப்பட்ட பகுதியினர் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு, தொலைநோக்குப் பார்வையுடன் அரசு திட்டமிட்டாக வேண்டும்.

Label