OUR CLIENTS
வேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள்! குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது?
வேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள்! குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது? Posted on 06-Dec-2018 வேலூர் மாநகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் விபத்துகளில் சிக்கி காயமடையும் பொதுமக்கள்! குறட்டை விடும் மாநகராட்சி ஆணையர் விழிப்பது எப்போது?

வேலூர், டிச.6-

வேலூர் மாநகரில் 24 மணி நேரமும் நெடுஞ்சாலையில் ஆடு, மாடுகள், நாய்கள் சுற்றித்திரிவதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையர் குறட்டை விடுவதில் இருந்து விழித்தெழுவது எப்போது? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேலூர் மாநகராட்சி வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சியாகும். குறிப்பாக பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் கனரக வாகனங்கள் (லாரிகள், பேருந்துகள்) மற்றும்  வேன்கள், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சாலையில் இரவு நேரங்களில் கால்டைகள் (ஆடு, மாடுகள்) மற்றும் நாய்கள் படுத்து கொள்கின்றன. இதனால் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
வாகன ஓட்டிகள் சிரமமின்றி தங்களது வாகனங்களை இயக்க முடியவில்லை. குறிப்பாக வேலூரில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்வதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக சாலையின் நடுவில் மாடுகள் படுத்து விடுகின்றன. இதனால் போக்குவரத்து தடைபடுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் இரவு நேரத்தில் இருட்டாக இருக்கும் பகுதியில் சாலையில் படுத்திருக்கும் மாடுகளை பார்க்க முடியாமல் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைவது அன்றாட வாடிக்கையாக உள்ளது. வேலூர் சாய்நாதபுரம் கணபதி நகரைச் சேர்ந்த ராமன் குமார், ரமேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் நேற்றுமுன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆரணி செல்லும் சாலையில் ஜெயமுருகன் திரையரங்கம் அருகில் உள்ள விநாயகர் கோயில் எதிரில் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. மற்ற மாநகராட்சிகளில் உள்ளது போன்று சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி நிர்வாகம் பட்டியில் கொண்டு சென்று அடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கால்நடைகள்தான் இப்படி என்றால் வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இந்த நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தகவல்கள் இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இருசக்கர வாகனங்களில் செல்வோரை இரவு நேரங்களில் நாய்கள் விரட்டிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இதுபோன்ற நாய்கள் தொடர்பான புகார்களை சேகரித்து வைத்து கொண்டு மாநகராட்சி நிர்வாகம் அதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தெருநாய்களை அங்கிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் மாநகராட்சி ஆணையர் நமக்கென்ன என்பது போன்று செயல்படுகிறார். தெரு நாய்கள், சாலைகளில் திரியும் மாடுகள் குறித்து விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மாநகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வசூல் வேட்டையில் மட்டுமே குறியாக இருக்கும் மாநகராட்சி ஆணையர் சிவ.சுப்பிரமணியம் தெருநாய்களை பிடிக்க டெண்டர் விட வேண்டும், அதேபோன்று சாலைகளில் திரியும் மாடுகளை பட்டியில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட்டு ஆழ்ந்த குறட்டை விடும் நிலையை மாநகராட்சி ஆணையர் மாற்றிக் கொள்வாரா? விரைவில் விழித்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label